பிகார் தேர்தல் 2025 :
Bihar Assembly Elections 2025 Opinion Poll : வட இந்தியாவில் இந்தி பேசும் மாநிலங்களில் பிகாருக்கு முக்கிய இடம் உண்டு. இம்மாநிலத்தில் 243 உறுப்பினர்களை கொண்ட சட்டசபைக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 6ஆம் தேதியும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 11ஆம் தேதியும் நடைபெறுகிறது. நவம்பர் 14ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. தேர்தலுக்கு ஒரு மாதமே இருப்பதால், கூட்டணி, வேட்பாளர் தேர்வு, பிரசார வியூகங்களில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன.
மீண்டும் என்டிஏ ஆட்சி தான்
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் வெளியான புதிய கருத்துக் கணிப்பு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆளும் பாஜக கூட்டணி 49% வாக்குகளுடன் 150-160 இடங்களை வெல்லும் என்று அந்த சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
IANS-Matrize News கருத்து கணிப்பு :
IANS-Matrize News ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த சர்வேயை எடுத்துள்ளன. இதில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக உள்ள என்டிஏ கூட்டணி வெற்றியை தக்க வைத்துக் கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலையின்மை, நிர்வாகம் குறித்து மக்களிடம் அதிருப்தி இருந்தாலும் அதையும் தாண்டி என்டிஏ கூட்டணி வெல்லும்(NDA Alliance Wins Bihar Election) என அந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
என்டிஏ-வுக்கு 49% வாக்குகள் :
49% பேர் என்டிஏவுக்கு வாக்களிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 தேர்தலில் என்டிஏ கூட்டணி 37.3% வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது. அதைவிட இந்தத் தேர்தலில் கூடுதலாக 12% வாக்குகளை என்டிஏ கூட்டணி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பாஜக 21% வாக்குகளுடன் 80-85 இடங்களைப் பெறும் என்றும், நிதிஷ்குமார் கட்சி 18% வாக்குகளுடன் 60-65 இடங்களைப் பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, லோக் ஜனசக்தி கட்சி மற்றும் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா மொத்தமாக 10-15 இடங்களைப் பெற வாய்ப்புள்ளது.
இந்தியா கூட்டணிக்கு சரிவு
மறுபுறம் இந்தியா கூட்டணி பின்னடைவை சந்திக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு 37.2% வாக்குகளைப் பெற்ற நிலையில், இந்தாண்டு 36% வாக்குகளைப் பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. வாக்கு சதவீத வித்தியாசத்தில் சுமார் ஒரு சதவீதம் மட்டுமே குறைந்தாலும், வெற்றி பெறும் இடங்கள் கடுமையாகச் சரியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020ல் இந்தக் கூட்டணி 110 இடங்களில் வென்ற நிலையில், இந்த முறை 70-85 இடங்களில் மட்டுமே வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ஆர்ஜேடி 21% வாக்குகளைப் பெற்று, 60-65 இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. அடுத்து காங்கிரஸ் 8% வாக்குகளுடன் 7-10 இடங்களைப் பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. இதர கூட்டணிக் கட்சிகள் மொத்தமாக 6-9 இடங்களைப் பெறும் என்று அந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
அடித்து ஆடும் பிரசாந்த் கிஷோர்
ஆட்டத்தை கலைத்து போட்டதில், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி பெரிய பங்கை வகிக்க போகிறது. எப்படி என்றால், இந்தக் கட்சி 7% வாக்குகளுடன் 2 முதல் 5 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளது. பல தொகுதிகளில் என்டிஏவின் வெற்றி, இந்தியா கூட்டணியின் தோல்வியை பிரசாந்த் கிஷோர் தீர்மானிப்பார் எனத் தெரிகிறது.
மேலும் படிக்க : பீகார் கணிப்பு: மீண்டும் NDA ஆட்சி: முதல்வர் யார்? பெரிய ட்விஸ்ட்
பாரம்பரிய சாதி அடிப்படையில் வாக்களிப்பவர்களில் கணிசமானோர் பிரசாந்த் கிஷோர் பக்கம் போகலாம். அதேபோல மஜ்லீஸ் கட்சி 1-3 இடங்களை வெல்லும் என IANS-Matrize News நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-----------------