
பிகார் சட்டமன்ற தேர்தல் 2025 :
Bihar Assembly Elections 2025 Opinion Poll : 243 உறுப்பினர்களை கொண்ட பிகார் சட்டசபையின் பதவிக் காலம் அடுத்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. எனவே, இம்மாத இறுதியில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது. இதற்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் அடுத்த வாரம் வெளியிடுகிறது. மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிகிறது.
கருத்துக் கணிப்பு முடிவுகள் :
இந்தநிலையில், பிகார் தேர்தல் தொடர்பாக முக்கிய கருத்துக்கணிப்பு முடிவுகள்(Bihar Election Exit Poll 2025) வெளியாகியுள்ளன. எந்தக் கட்சிக்கு எவ்வளவு சீட் கிடைக்கும், யார் விரும்பிய முதல்வர் வேட்பாளர்கள் என்பது குறித்த கேள்விக்கு மக்கள் அளித்துள்ள பதில்களைக் கவனித்தால் அங்குள்ள அரசியல் களத்தின் வித்தியாசம் தெரிகிறது.
மீண்டும் என்டிஏ ஆட்சி தான்
SPICK மீடியா நெட்வொர்க் நடத்திய கருத்துக் கணிப்பின்படி, பாஜகவின் என்டிஏ கூட்டணி ஆட்சி தக்க வைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. என்டிஏ 46% வாக்குகள் பெற்று, சுமார் 158 இடங்களை வெல்லும் என்று ஆய்வு தெரிவிக்கிறது. மறுபுறம், எதிர்க்கட்சிகளின் மகா பந்தன் கூட்டணி 41% வாக்குகள் கிடைத்தாலும், வெறும் 66 இடங்களை மட்டுமே பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜன் சுராஜ் கட்சிக்கு 8% வாக்கு
பிரசாந்த் கிஷோரின்(Prashant Kishore Party) ஜன சுராஜ் கட்சி 8% வாக்குகளைப் பெற்று, வாக்கு வங்கி அடிப்படையில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும். இருப்பினும், அந்தக் கட்சியால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் பிஎஸ்பி, மஜ்லீஸ் கட்சிகள் பிரசாந்த் கிஷோர் கட்சியை விடக் குறைவான வாக்குகளைப் பெற்றாலும் கூட, பிஎஸ்ஜி ஒரு இடத்திலும் மஜ்லீஸ் கட்சி 4 இடங்களிலும் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் யார்? ட்விஸ்ட்
முதல்வர் பதவியில் யார் இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு வந்த பதில்களில் தான் சுவாரசியம் இருக்கிறது. அதிகபட்சமாக 30.5% பேர் தேஜஸ்வி யாதவை ஆதரித்தனர். அதேசமயம் 27.4% பேர் நிதிஷ் குமாரை ஆதரித்தனர். 13% ஆதரவோடு பிரஷாந்த் கிஷோர் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். தொடர்ந்து அடுத்த இடத்தில் சிராக் பாஸ்வான் 12% ஆதரவோடு இருக்கிறார்.
தேஜஸ்வி செல்வாக்கு அதிகரிப்பு
அதாவது கட்சி ரீதியாக என்டிஏ முன்னணியில் இருந்தாலும் தேஜஸ்வி யாதவுக்கு தனிப்பட்ட முறையில் செல்வாக்கு அதிகமாகவே இருக்கிறது. அதேபோல JVC என்ற இன்னொரு அமைப்பு நடத்திய சர்வே முடிவுகளும் வெளியாகியுள்ளது. அதில் பாஜகவின் என்டிஏ கூட்டணி 131 முதல் 150 இடங்களைப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. மகாகத்பந்தன் 81 முதல் 103 இடங்களைப் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதேநேரம் பிரசாந்த் கிஷோரின் ஜன சராஜ் கட்சி 4 முதல் 6 இடங்களில் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் பதவிக்கு யார் பெஸ்ட் என்ற கேள்விக்கு இதில் கடும் போட்டி நிலவுகிறது. ஜேவிசி சர்வேயில் 27% வாக்குகளுடன் நிதிஷ் குமார் முதலிடத்தில் இருக்கிறார். அதேநேரம் தேஜஸ்வி யாதவ் மிக அருகிலேயே 25% வாக்குகளுடன் 2வது இடத்தில் இருக்கிறார். பிரஷாந்த் கிஷோர் 15%, சிராக் பாஸ்வான் 11%, சம்ராட் சவுத்ரி 8% ஆதரவோடு அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறார்கள்.
கடைசி கட்ட பிரசாரம் முடிவு எடுக்கும்
அதாவது கட்சி ரீதியாகப் பார்த்தால் பாஜக கூட்டணியே முன்னணியில் இருக்கிறது. அதேநேரம் தேஜஸ்வி யாதவுக்கு அங்கு மிகப் பெரிய செல்வாக்கு இருக்கிறது. இதனால் அங்குப் போட்டி மிகக் கடுமையாக இருக்கும். தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பு அதாவது, கடைசிக் கட்ட பிரசாரத்தைப் பொறுத்தே வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படும்.
மேலும் படிக்க : Bihar: EVMல் வேட்பாளர் வண்ண புகைப்படம் : பீகார் தேர்தலில் அறிமுகம்
யாருக்கு அரியணை?
மகா பந்தன் கூட்டணி பிரசாரத்தை சிறப்பாக முன்னெடுத்தால் மட்டுமே அதிக இடங்களை கைப்பற்ற முடியும். என்டிஏ கூட்டணியும் திட்டமிட்டு, வாக்கு சேகரித்தால் மட்டுமே மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முடியும் என்ற நிலை அங்கு நிலவுகிறது.
=====