Election Commission Announcement Of SIR Drive Across Tamil Nadu 77,000 Officers in Special Intensive Revision For Electoral Rolls in TN Election Commission Of India Public Conference
இந்தியா

தமிழக SIR பணியில் 77 ஆயிரம் அதிகாரிகள் : தேர்தல் ஆணையம் அதிரடி!

Tamil Nadu SIR News: தமிழ்நாட்டில் பிழையற்ற வாக்காளர் பட்டியலை உருவாக்கும் நோக்கில் இந்தியத் தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் சுமார் 77,000 அதிகாரிகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Bala Murugan

SIR பணி தொக்கம் :

Tamil Nadu SIR Drive News Update : தமிழ்நாட்டில் துல்லியமான மற்றும் பிழையற்ற வாக்காளர் பட்டியலை உருவாக்கும் நோக்கில், 20 ஆண்டுகளுக்கு மேலான இடைவெளிக்குப் பிறகு ஒரு முக்கிய பணியாக, சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை (Special Intensive Revision - SIR) இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான பணிகள் தற்பொழுது தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இதுகுறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்த சிறப்புத் தீவிர திருத்தப் பணியில் ஏறக்குறைய 77,000 அதிகாரிகள் ஈடுபட உள்ளதாகவும், இது குறித்து அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

களத்தில் 77,000 அதிகாரிகள்

இது குறித்து தேர்தல் ஆணையம்(Election Commission) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 2025, அக்டோபர் இறுதி வாரம் முதல் 2026, பிப்ரவரி முதல் வாரம் வரை நடைபெறவுள்ள இச்சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட தேர்தல் அதிகாரிகள் முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வரை ஏறக்குறைய 77,000 அதிகாரிகள் பணிபுரிவர்.

SIR பணியில் ஈடுபடுபவர்களுக்கு பயிற்சி

இந்நிலையில், இந்த சிறப்பு தீவிர திருத்தத்திற்கான(SIR in Tamil Nadu) தயாரிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இவ்வதிகாரிகளுக்கு இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வீடு வீடாக கணக்கெடுப்பு, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு, உரிமை கோரல்கள் மற்றும் மறுப்புரைகள் ஆகியவற்றை கையாளும் முறைகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

இப்பயிற்சியில் 38 மாவட்ட தேர்தல் அதிகாரிகள், 234 வாக்காளர் பதிவு அலுவலர்கள், 624 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், 7,234 வாக்குச்சாவடி நிலை அலுவலக மேற்பார்வையாளர்கள், 68,472 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் பங்கு பெறுவர். இந்த பயிற்சிகள் ஆனது தமிழ்நாட்டின் தலைமைத் தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் வாக்காளர் பதிவு அதிகாரிகளால் நடத்தப்படும்.

வாக்காளர் பட்டியல் துல்லியமானதாக இருக்கும்

இச்சிறப்பு தீவிர திருத்தத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் இத்தீவிர திருத்தத்தின் செயல்முறையை நன்கறிந்து கொள்வதையும், மாநிலம் முழுவதும் இச்செயல்முறையை சீராக செயல்படுத்துவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு பயிற்சிகள் வழங்கப்படும். 20 ஆண்டுகளுக்கு மேலான இடைவெளிக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் இந்தப் பணியின் நோக்கம் வாக்காளர் பட்டியல்கள் துல்லியமாகவும் பிழையற்றவையாகவும் இருப்பதை உறுதி செய்வதாகும்.

புதிய விவரங்கள் சேகரிப்பு

அடுத்த மாதம் (நவம்பர்) 4-ந்தேதி முதல் டிசம்பர் 4-ந்தேதி வரை, வாக்குச்சாவடி(SIR Begins Date in Tamil Nadu) நிலை அலுவலர்கள் வீடு தோறும் சென்று, தற்போதைய வாக்காளர்களுக்கு முன்பே நிரப்பப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை விநியோகித்து, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை மீண்டும் சேகரிப்பார்கள். அப்போது, அங்கு இல்லாதவர்/ இடம் மாறியவர்/ இறந்தவர்/ இரட்டைப் பதிவுகள் ஆகியவற்றை அடையாளம் காண்பதுடன், புதிய தகுதியுள்ள வாக்காளர்களின் விவரங்களையும் சேகரிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்கப்படும்

மேலும், எந்தவொரு வாக்காளரும் விடுபடக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களைப் பெறுவதற்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஒவ்வொரு வீட்டுக்கும் குறைந்தது மூன்று முறை செல்லுவார். மேலும், தற்போதைய வாக்காளர்களுக்கு இணையதளம் வழியாக முன்பே நிரப்பப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களையும் ஆவணங்களையும் பதிவேற்றும் வசதியும் வழங்கப்படும். முன்-திருத்த காலத்தில், 2025 டிசம்பர் 4-ந்தேதிக்குள், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் அதிகபட்சம் 1,200 வாக்காளர்கள் மட்டுமே இருப்பதை உறுதி செய்யும் வகையில் வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்கப்படும்.

மேலும் படிக்க : SIR : அலறும் திமுக கூட்டணி : உண்மையில் ஆபத்தா? விரிவான அலசல்

அர்ச்சனா பட்நாயக் விளக்கம்

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் ஆலோசனை: தமிழ்நாட்டில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். மேலும், இக்கூட்டத்தில், சிறப்பு தீவிர திருத்தத்தின் நடைமுறை, வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான பயிற்சி, வாக்காளர்களுக்கு உதவுவதில் வாக்குச்சாவடி நிலை முகவர்களின் பங்கு ஆகியவற்றைப் பற்றி விரிவாக விளக்கப்பட்டது.

வாக்குச்சாவடி நிலை முகவர் நியமனம்

இதைத்தொடர்ந்து, அரசியல் கட்சிகள் வாக்குச்சாவடி நிலை அலுவலருடன் இணைந்து பணியாற்றுவதற்கு, ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலையத்திற்கும் ஒரு வாக்குச்சாவடி நிலை முகவரை நியமிக்குமாறு ஊக்குவிக்கப்பட்டது. சிறப்பு தீவிரத் திருத்தம், 2026-ன் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் அட்டவணை தொடர்பாக விளக்கக் காட்சி அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு, கூட்டத்தின் போது காண்பிக்கப்பட்டது.

பிழையற்ற வாக்காளர் பட்டியல் உருவாக்குவதற்கு ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்பு

மேலும், இக்கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் தங்களது ஆலோசனை மற்றும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். ஜனவரி 1, 2026 நிலவரப்படி 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து தகுதியுள்ள குடிமக்களும், வீடு தோறும் கணக்கீட்டு பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முழுமையான, துல்லியமான மற்றும் பிழையற்ற வாக்காளர் பட்டியல் உருவாக்குவதற்கு ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்பும் முக்கியமானதாகும்." இவ்வாறு தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.