நாள்தோறும் புதிய உச்சம் :
Gold Rate Today in Chennai : சர்வதேச நிலவரங்கள், அமெரிக்காவில் கூடுதல் வரி விதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவு நாள்தோறும் புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. சர்வதேச முதலீட்டாளர்கள், பாதுகாப்பு கருதி தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்கின்றனர். அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், 'எச் 1 பி' விசா கட்டணத்தை உயர்த்தியதும், தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. .வரும் நாட்களில் மேலும் விலை உயரும் என்று நகை வியாபாரிகள் எச்சரிக்கின்றனர்.
ஒருமாத காலத்திற்கு மேலாக அதிகரித்து வரும் விலை, நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 10,290 ரூபாய்க்கும், சவரன், 82,320 ரூபாய்க்கும் விற்பனையானது.வாரத்தின் தொடக்க நாளான நேற்று, காலையில் கிராமுக்கு, 70 ரூபாய் உயர்ந்து, 10,360 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 560 ரூபாய் அதிகரித்து, 82,880 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால், மதியம் தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது.
நேற்று சவரனுக்கு ரூ.1,120 அதிகரிப்பு :
வெள்ளி கிராமுக்கு, 3 ரூபாய் உயர்ந்து, 148 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கிராமுக்கு, 70 ரூபாய்உயர்ந்து, 10,430 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 560 ரூபாய் அதிகரித்து, எப்போதும் இல்லாத வகையில், 83,000 ரூபாயை தாண்டி, 83,440 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று மட்டும், தங்கம் விலை சவரனுக்கு, 1,120 ரூபாய் அதிகரித்தது.
வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் :
இந்தநிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும், தங்கத்தின் விலை மீண்டும் ஏற்றம் கண்டது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் ரூ.84,000க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் ரூ.10,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரலாறு காணாத வகையில் ஒரு சவரன் ரூ.84 ஆயிரத்தை எட்டி நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
மேலும் படிக்க : Gold : 83,000-யை நெருங்கியது தங்கம் : புதிய உச்சத்தில் வெள்ளி விலை
வெள்ளி விலையும் புதிய உச்சம் :
தங்கத்திற்கு போட்டியாக வெள்ளி விலையும் நாள்தோறும் அதிகரித்து, புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அதன்படி, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.149க்கு விற்பனை(Silver Rate Today) செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 49 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
==============