ISRO aims to launch seven missions by March 2026, including first uncrewed Gaganyaan test flight G1 Mission ISRO
இந்தியா

ISRO : அடுத்த பாய்ச்சலில் இந்தியா : மார்ச்சில் ஆளில்லாத விண்கலம்

Gaganyaan Mission Launch Date : விண்வெளி ஆய்வில் அடுத்த பாய்ச்சலாக மார்ச் மாதம் ஆளில்லாத விண்கலத்தை செலுத்துகிறது இந்தியா.

Kannan

தகவல் தொடர்பு செயற்கைக்கோள்

Gaganyaan Mission Launch Date : இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோ 4,410 கிலோ எடை கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை வடிவமைத்தது. சிஎம்எஸ்-03 எனப்படும் அந்த செயற்கைக்கோள், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

பாகுபலி ராக்கெட் எல்விஎம் 3- எம்5

பாகுபலி என்று செல்லமாக அழைக்கப்படும் எல்விஎம் 3- எம்5 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன், “செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்தத் திட்டம் 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது.

சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் தகவல் தொடர்புக்காகவும், இந்திய கடற்பரப்பு உள்ளிட்ட கடல்பிராந்தியங்களை கண்காணிக்கவும் பயன்படும். அடுத்த 15 ஆண்டுகளுக்கு தகவல்களை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பல புதிய தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன. தன்னிறைவு இந்தியாவுக்கு மற்றுமொரு உதாரணமாக உள்ளது.

சவாலில் வெற்றி பெற்றோம்

செயற்கைக்கோள் ஏவப்படும் வரையில் பல்வேறு சவால்கள் மற்றும் கடினமான நேரங்களை நாம் எதிர்கொண்டிருந்தோம். பருவநிலை நமக்கு சாத்தியம் இல்லாமல் இருந்தது. ஆனால், இதனை நாம் சவாலாக எடுத்துக் கொண்டதுடன் ஒருவருக்கு ஒருவர் ஊக்கமளித்து, மோசமான வானிலை நிலவிய போதும், செயற்கைக்கோள் திட்டத்தை பிரம்மாண்டமாகவும், வெற்றிகரமாகவும் ஆக்கி உள்ளோம்.

அதிக எடை கொண்ட ராக்கெட்

கடற்படை, ராணுவ பயன்பாட்டுக்காக இந்த செயற்கைக்கோள் ரூ.1,600 கோடியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடற்படை தகவல் தொடர்பு மற்றும் கடலோர பாதுகாப்புக்கு இது ஊக்கம் அளிக்கும்.

மார்ச் மாதம் ஆளில்லா விண்கலம்

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும், 'ககன்யான்' திட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அதற்கு முன், மூன்று ஆளில்லா விண்கலங்களை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் முதல் முயற்சியாக மார்ச் மாதம் முதல் ஆளில்லாத விண்கலம் விண்ணில் பாயும்.

2026 மார்ச் 31ம் தேதிக்கு முன் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கான உபகரணங்கள் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு வந்துள்ளன. தற்போது அவற்றை ஒருங்கிணைக்கும் பணி நடைபெற்று வருகிறது

குலசேகரபட்டினம் - சிறிய ராக்கெட்டுகள்

தமிழகத்தில் குலசேகரப்பட்டினம் பகுதியில் ஏவு தளம் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவை முடிவடைந்த பின்னர், மூன்று வாரங்களுக்கு ஒருமுறை, சிறிய ரக ராக்கெட்டுகளை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளோம்” என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.

இஸ்ரோவில் ராக்கெட், செயற்கைக்கோளின் சிறப்பம்சங்கள்

  • ராக்கெட் பெயர் - எல்விஎம்3- எம்5

  • செயற்கைக்கோள்: சிஎம்எஸ்-03, மல்டி பேண்ட் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்.

  • இந்திய நிலப்பரப்பில் மல்டி பேண்ட் தொலைதொடர்பு சேவைகள்

  • அதிக அலைவரிசை, வாய்ஸ், டேட்டா, வீடியோ தொடர்புக்கான மேம்பட்ட பாதுகாப்பு இணைப்புகள்

  • கடல்சார் கண்காணிப்பை மேம்படுத்தும், கடற்படை கட்டளை, கட்டுப்பாட்டை வலுப்படுத்தும்.

===================