முன்பதிவு ரத்துக்கு கட்டணம்
DGCA Flight Cancellation Policy 2025 : விமான கட்டணம் என்பது ஒருபக்கம் அதிகமாக இருந்தாலும், தவிர்க்க முடியாத காரணங்களால் முன்பதிவை ரத்து செய்யும் போது அதற்காக ஒரு தொகையை செலுத்த வேண்டி இருக்கிறது. மேலும் முன்பதிவு டிக்கெட்டுகளை ரத்து செய்து பணத்தைத் திரும்பப் பெறுவதில் கால தாமதம் மற்றும் தன்னிச்சையாக ரத்து கட்டணங்கள் அதிகரிப்பு குறித்து பயணிகள் தொடர்ந்து புகாரளித்து வந்தனர்.
பயணிகளின் நலனில் DGCA
இதற்கு தீர்வு காணும் விதமாக விமான ஒழுங்குமுறை ஆணையமான சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ( DGCA ), பணத்தைத் திரும்பப் பெறுதல் கொள்கைகளில் மாற்றங்களை முன்மொழிந்துள்ளது. பயணிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் இந்த பரிந்துரைகள் அமைந்துள்ளன.
48 மணி நேரத்தில் ரத்து செய்தால் இலவசம்
புதிய விதிகள் மற்றும் விதிமுறைகள் நாட்டில் இயங்கும் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிறுவனங்களுக்குப் பொருந்தும். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த வரைவு பயணிகள் முன்பதிவு செய்த இரண்டு நாட்களுக்குள்(48 மணிநேரத்தில்) இலவசமாக தங்கள் விமான டிக்கெட்டுகளை ரத்து செய்யவோ அல்லது மாற்றவோ அனுமதிக்கும்.
பயணிகளுக்கு குட் நியூஸ்
பயணிகள் டிக்கெட்டை ரத்து செய்தால் கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது. டிக்கெட்டை திருத்தி வேறு தேதியில் பயணிக்க விரும்பினால், அந்த நாளில் டிக்கெட் விலை கூடுதலாக இருந்தால், அதற்கான பணத்தை மட்டும் பயணிகள் செலுத்தினால் போதும். இல்லையென்றால், பழைய கட்டணத்திலேயே அவர்களுக்கு டிக்கெட் வழங்கப்படும்.
DGCA விதிமுறைகள்
புதிய விதிமுறை உள்நாட்டு விமானங்களுக்கு 5 நாட்களுக்குள் மற்றும் சர்வதேச விமானங்களுக்கு 15 நாட்களுக்குள் புறப்படும் விமானங்களுக்கு பொருந்தாது எனவும் DGCA தெரிவித்துள்ளது. அதாவது, புறப்பாடு நெருங்கிய விமான டிக்கெட்டுகளுக்கு இந்த சலுகை கிடையாது. மேலும், பெயர் தப்பாக உள்ளதை 24 மணி நேரத்திற்குள் சுட்டிக்காட்டினால், அதற்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது எனவும் விதிகள் கூறுகின்றன.
டிக்கெட் ரத்து செய்யப்பட்டதும், கிரெடிட் கார்டு மூலம் செலுத்தப்பட்டு இருந்தால், 7 நாட்களுக்குள் பணம் திருப்பி வழங்கப்பட வேண்டும். காசு பரிவர்த்தனையாக இருந்தால், உடனடியாக பணம் திருப்பி வழங்கப்படும்.
பயணிகளிடம் கருத்துக் கேட்பு
இந்த வரைவு விதிமுறைகளுக்கு பொது மக்களின் கருத்துக்கள் நவம்பர் 30 வரை பெறப்படுகின்றன. பின்னர் DGCA இறுதி விதிகளை அறிவிக்கும். இந்த புதிய முறை நடைமுறைக்கு வந்தால், பயணிகள் எதிர்கொள்ளும் ரத்து கட்டண சிக்கல்கள், பணம் திருப்பி வழங்க தாமதம், மற்றும் தெளிவற்ற விதிமுறைகள் ஆகியவற்றுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.
==================