இஸ்ரோ - விண்ணில் படைக்கும் சாதனை :
ISRO Launch Earth Observation NISAR Satellite Today : விண்வெளி ஆய்விலும், செயற்கைகோள்களை செலுத்துவதிலும், இந்தியா நிபுணத்துவம் பெற்று, சாதனைகளை படைத்து வருகிறது. இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பான இஸ்ரோ, வணிக ரீதியாகவும் செயற்கைகோள்களை செலுத்தி வருகிறது.
கூட்டு தயாரிப்பில் ’நிசார் செயற்கைகோள்’ :
நாசாவும் - இஸ்ரோவும் நிசார் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்காக 2013ல் ஒப்பந்தம் செய்து இருந்தன.12 ஆயிரம் கோடி மதிப்பில் நிசார் செயற்கைக்கோள் தயாரிப்பு பணிகள் கடந்தாண்டு நிறைவு பெற்றன. இதையடுத்து ஆந்திர மாநிலம், ஹரிகோட்டாவில் உள்ள 2வது ஏவு தளத்தில் இருந்து இன்று மாலை 05.45 மணியளவில் ஜி.எஸ்.எல்.வி எப்-16 ராக்கெட் மூலம் நிசார் செயற்கைகோள் விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான ‘கவுண்ட்டவுன்’ மேற்கொள்ளப்பட்டு, எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்து இருக்கிறது.
பூமியை ஸ்கேன் செய்யும் ’நிசார்’ :
புவியின் மேற்பரப்பு மாற்றங்களைக் கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்ட நிசார், எல் பேண்ட், எஸ் பேண்ட் ரேடார்களை உள்ளடக்கியுள்ளது. இரண்டு ரேடார்கள் இந்த செயற்கைக்கோளில் செயல்படுவதால், பூமியில் சில அங்குலம் நிலங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கூட மிக துல்லியமாக கண்டறிய முடியும். 12 நாட்களுக்கு ஒரு முறை பூமியை முழுமையாக ஸ்கேன் செய்யும் இந்த செயற்கைக்கோள் பனிப்பாறை நகர்வு, காடுகள் அழிப்பு, நிலநடுக்கம், சுனாமி, சுற்றுச்சூழல் மாற்றம் உள்ளிட்டவற்றை கண்காணிக்கும்.
மேலும் படிக்க : புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் : 30ம் தேதி செலுத்துகிறது இஸ்ரோ
துல்லியமாக செயல்படும் நிசார் :
நிசார் செயற்கைக்கோளில் இரண்டு முக்கிய ரேடார் தொழில்நுட்பங்கள் உள்ளன. இவை இரண்டும் இணைந்து பூமியின் மேற்பரப்பை மிக விரிவாகவும், நுணுக்கத்துடன் படம் பிடித்து அனுப்பும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த செயற்கைக்கோள் புவியில் இருந்து 743 கி.மீ. தொலைவில் சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும்.
====