இந்திய நாடாளுமன்றம் :
Parliament Winter Session 2025 Schedule Dates India in Tamil : பிகார் சட்டசபை தேர்தல் முடிவுக்கு வந்த பிறகு, பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்றம் கூடுகிறது. குளிர்கால கூட்டத்தொடர் என்று அழைக்கப்படும் இந்தக் கூட்டம் டிசம்பர் 1ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
குளிர்கால கூட்டத்தொடர்
இதுகுறித்து, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 1 முதல் டிசம்பர் 19 வரை கூட்டுவதற்கான மத்திய அரசின் முன்மொழிவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆக்கப்பூர்வமான விவாதங்கள்
நமது ஜனநாயகத்தை வலுப்படுத்தும் மற்றும் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் ஒரு ஆக்கபூர்வமான, அர்த்தமுள்ள கூட்டத்தொடரை நான் எதிர்நோக்குகிறேன்.” என்று அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
மழைக்கால கூட்டம்
முன்னதாக ஜூலை 21 அன்று தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், ஆகஸ்ட் 21ம் தேதி நிறைவுற்றது. இந்த கூட்டத்தொடர் 32 நாட்களில் 21 அமர்வுகளை கொண்டிருந்தது.
பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல் உள்ளிட்டவை விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் கோரியதால், கூட்டத்தொடர் தொடர்ந்து பாதிக்கப்பட்டது. இதனால் மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவையின் செயல்பாடு 31 சதவீதமாகவும், மாநிலங்களவையின் செயல்பாடு 39 சதவீதமாகவும் இருந்தது.
குளிர்கால கூட்டத் தொடர்
குளிர்கால கூட்டத் தொடரில் 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விவகாரம், அமெரிக்க வரி விதிப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. பல்வேறு முக்கிய பிரச்சினைகள் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இருக்கின்றன.
========