

பிகார் சட்டமன்ற தேர்தல்
Bihar Assembly Election 2025 Voting Percentage in Tamil : பீகார் சட்டப்பேரவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு 6ம் தேதி நடைபெற்றது. 18 மாவட்டங்களில் உள்ள 121 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், மீதம் உள்ள 122 தொகுதிகளில் வரும் 11ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. 14ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
நிதிஷ்குமார் vs தேஜஸ்வி
முக்கிய தேர்தலாக பார்க்கப்படும் பீகார் சட்டப்பேரவை தேர்தல் பரபரப்புடனும், விறுவிறுப்புடனும் நடைபெற்று, நாட்டின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. 20 ஆண்டுகளாக ஆட்சிக் கட்டிலில் இருக்கும் நிதிஷ் குமார், அதை மீண்டும் தக்க வைப்பாரா அல்லது இளைஞரான தேஜஸ்வி யாதவிடம் பறிகொடுப்பாரா என்பது 14ம் தேதி அன்று தெரிந்துவிடும்.
8.5% உயர்ந்த வாக்குப்பதிவு
முதல் கட்ட தேரத்லில் 64.66% வாக்குகள் பதிவாகின. 2020ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், இந்த 121 தொகுதிகளிலும் 56.1% வாக்குகள் மட்டுமே பதிவாகின. இந்த தேர்தலில் வாக்குப்பதிவு 8.5% உயர்ந்துள்ளது. சுமார் 3 கோடி பேர் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
பிகார் தேர்தல் வரலாறு
வழக்கமாக வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக இருந்தால், அது ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை என்று கூறப்படும். இதில் உண்மை இருந்தாலும், சில சமயம், ஆளுங்கட்சிக்கு அமோக வெற்றியையும் தேடித் தந்திருக்கிறது. பிகாரை பொருத்தவரை 5 சதவீதம் வாக்குகள் உயர்ந்தாலே ஆட்சி மாற்றம் நிச்சயம்
1962 தேர்தலில் 44.5% வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், 1967 தேர்தலில் வாக்குப்பதிவு 51.5% ஆக உயர்ந்தது. அதாவது 7% அளவுக்கு உயர்ந்தது. அந்த தேர்தலில் காங்கிரஸ் முதல்முறையாக ஆட்சியை இழந்து மற்ற கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன.
1977 தேர்தலில் 50.5% வாக்குகள் பதிவாகின. 1980ம் ஆண்டில் நடந்த தேர்தலில் 57.3% வாக்குகள் பதிவாகின. அப்போது ஜனதா கட்சி ஆட்சிக் கவிழ்து, காங்கிரஸ் ஆட்சிக் கட்டிலில் ஏறியது.
1990ம் ஆண்டு நடந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கு 5.8% உயர்ந்தது. அப்போது காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுக்க லாலு கட்சி அரியணை ஏறியது. அதேசமயம் வாக்குப்பதிவு அதிகமாக குறைந்தாலும் ஆட்சி மாற்றம் என்ற வரலாற்றை பிகார் படைத்துள்ளது.
2025 - யாருக்கு அரியணை?
2005ம் ஆண்டு தேர்தலில் 16% வாக்குப்பதிவு குறைய, ஐக்கிய ஜனதா தளம் வெற்றிபெற்று நிதிஷ் குமார் முதல்முறையாக முதல்வர் ஆனார். இந்தமுறை முதற்கட்ட தேர்தலில் வாக்கு சதவீதம் 8.5 என்ற வகையில் அதிகரித்து இருக்கிறது. இதனால் பிகாரில் மீண்டும் என்டிஏ ஆட்சியா? அல்லது ஆட்சி மாற்றமா? என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கிறது.
121 தொகுதிகளில் முக்கியமானவை
தேர்தல் நடைபெற்ற 121 தொகுதிகளும் பீகார் அரசியல் நாடித்துடிப்பை சரியாக கணிக்கும் திறக் கொண்டவை. இந்த தொகுதிகளில் கடும் போட்டி நிலவுகிறது. இந்த தொகுதிகளில் 42 இடங்களை தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. அதற்கடுத்து பாஜக 32, ஐக்கிய ஜனதா தளம் 23, காங்கிரஸ் 8, இடதுசாரி கட்சிகள் இணைந்து 11, சிறு சிறு கட்சிகள் மீதம் உள்ள 6 இடங்களை வென்றன.
சாதிப்பாரா நிதிஷ்குமார்
சோசியலிச தலைவராக பார்க்கப்படும் நிதிஷ் குமாரின் கடைசி தேர்தலாக இது பார்க்கப்படுகிறது. இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணி நிதிஷ் குமாரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவில்லை. நிதிஷ் குமாரை முன்னிறுத்தி அவர்கள் தேர்தலை சந்தித்தாலும் கூட, ஒருவேளை ஐக்கிய ஜனதா தளத்தை விட பாஜக அதிக தொகுதிகளை வென்றால் முதல்வர் வேட்பாளரில் மாற்றம் இருக்கலாம். பெண்கள் மற்றும் சிறுபான்மையின மக்களிடம் பெரும் செல்வாக்கும் பெற்ற நிதிஷ், 20 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்து வருகிறார்.
தேஜஸ்வி முதல்வரா?
அதேசமயம் மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தேஜஸ்வி யாதவ் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார். கடந்த முறையே நெருங்கி வந்த வெற்றியும், ஆட்சி அதிகாரமும் கையைவிட்டு போன நிலையில், 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அந்தக் கட்சிக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
எனவே, மக்கள் தீர்ப்பு என்ன? அரியணை யாருக்கு? நிதிஷா? தேஜஸ்வியா என்ற கேள்விகளுக்கு 14ம் தேதி விடை(Bihar Election 2025 Results Date in Tamil) தெரிந்து விடும்.
-----