ஷாங்காய் உச்சி மாநாடு :
PM Modi in SCO Summit 2025 : ஷாங்காய் உச்சி மாநாட்டில், அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அமெரிக்காவின் வரி விதிப்பு போர், தீவிரவாதம் பற்றி இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
ஷாங்காய் அமைப்பிற்கு இந்தியா ஆதரவு :
மாநாட்டில் உரையாற்றி பிரதமர் நரேந்திர மோடி, “ ஷாங்காய் அமைப்பின் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. வரவேற்பு அளித்த சீன அதிபருக்கு நன்றி. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா சாதகமான பங்கை வகித்து வருகிறது. நாட்டின் முன்னேற்றத்திற்கு பாதுகாப்பு, அமைதி முக்கியம்.
பயங்கரவாதம் மிகப்பெரிய சவால் :
பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு சவாலாக உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை எஸ்சிஓ என்பது, எஸ்-பாதுகாப்பு, சி-இணைப்பு, ஓ-வாய்ப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டதாகும்.
பயங்கரவாதத்தை இந்தியா எதிர்க்கும் :
அல் கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக இந்தியா நடவடிக்கை மேற்கொண்டது. பயங்கரவாதத்திற்கு எதிராக ஒற்றுமையை இந்தியா வலியுறுத்துக்கிறது. குரல் கொடுக்கிறது. நான்கு சதாப்தங்களாக ( 40 ஆண்டுகள் ) பயங்கரவாதத்தை இந்தியா எதிர்கொண்டு வருகிறது.
ஆதரவளித்த நாடுகளுக்கு நன்றி :
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்(Pahalgam Terrorist Attack) சம்பவம் நடந்த போது இந்தியாவுக்கு ஆதரவாக இருந்த நட்பு நாடுகளுக்கு நன்றி. ஒரு நாடு வளர்ச்சியடைய வேண்டுமானால், பாதுகாப்பும், அமைதியும், நிலைத்தன்மையும் மிகவும் அவசியம். பயங்கரவாதமும், பிரிவினைவாதமும் வளர்ச்சிக்கு தடைக்கல்லாக இருக்கிறது.
மனித குலத்திற்கே ஆபத்து :
ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த மனித குலத்துக்கே பயங்கரவாதம் ஆபத்தாக உள்ளது. பாதுகாப்பு, அமைதி ஸ்திரத்தன்மையே ஒரு நாட்டின் வளர்ச்சிக்குக் காரணம். இந்த பாதையில் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதம் மிகப்பெரிய சவாலாக உள்ளது.
பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை :
சில நாடுகள் பயங்கரவாத விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகின்றன. ஒரு பக்கம் எதிர்ப்பு, இன்னொரு புறம் மறைமுக ஆதரவு. இத்தகைய நாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. கடும் நடவடிக்கை மூலமே சிலவற்றை ஒடுக்க முடியும். இதற்கு, உலக நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம்” இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.
மேலும் படிக்க : SCO Summit 2025: அதிபர் புதினை சந்தித்ததில் மகிழ்ச்சி-பிரதமர் மோடி
பாக். பிரதமர் முன்னிலையில் எச்சரிக்கை
இந்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பும் கலந்து கொண்டார். அவர் முன்னிலையிலேயே பஹல்காம் தாக்குதல், இந்தியா கொடுத்த பதிலடி, பயங்கரவாத விவகாரத்தில் இரட்டை வேடம் போன்றவற்றை பிரதமர் மோடி உறுதியுடன் பேசியது, பாகிஸ்தானுக்கு கொடுத்த பதிலடியாகவே பார்க்கப்படுகிறது.
=============