இஸ்ரேல் - ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் :
PM Modi on Israel Gaza War Ceasefire : இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக நீடித்து வந்த சண்டை ஒருவழியாக முடிவுக்கு வருகிறது. இதனால் காசா பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விடத் தொடங்கி இருக்கிறார்கள். இதற்காக தீவிர முயற்சி மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்பிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவரும் அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்துள்ளார்.
டிரம்பிற்கு மோடி வாழ்த்து
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து, அதிபர் டிரம்பை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவில், “எனது நண்பர் அதிபர் ட்ரம்ப்பிடம் பேசி, வரலாற்று சிறப்புமிக்க காசா அமைதி ஒப்பந்தத்தின் வெற்றிக்காக வாழ்த்தினேன். வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட நல்ல முன்னேற்றத்தையும் மதிப்பாய்வு செய்தேன். வரும் வாரங்களில் நெருங்கிய தொடர்பில் இருக்க ஒப்புக் கொண்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க : Gaza Ceasefire : இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் : டிரம்ப் மகிழ்ச்சி
நெதன்யாவுக்கு மோடி வாழ்த்து
அதேபோன்று, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், “எனது நண்பர் பிரதமர் நெதன்யாகுவை தொலைபேசியில் அழைத்து, அதிபர் ட்ரம்ப்பின் காசா அமைதி ஒப்பந்தத்தின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கு வாழ்த்து தெரிவித்தேன். பணயக்கைதிகள் விடுதலை மற்றும் காசா மக்களுக்கு மனிதாபிமான உதவி தொடர்பான ஒப்பந்தத்தை நாங்கள் வரவேற்கிறோம். உலகில் எந்த வடிவத்திலும் அல்லது வெளிப்பாட்டிலும் பயங்கரவாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினோம்” என்று தெரிவித்துள்ளார்.
==========