
இஸ்ரேல் - ஹமாஸ் சண்டை :
Donald Trump on Israel Gaza War Ceasefire : இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக சண்டை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக காசா பகுதி கடுமையான பேரழிவினை சந்தித்து வருகிறது. பெரும்பாலான கட்டிடங்கள் குண்டு வீச்சில் தரை மட்டமாகி கிடக்கின்றன. 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போரில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இடிபாடுகளை அகற்றவும், காசாவை மீட்டு எடுக்கவும் 25 ஆண்டுகள் தேவைப்படும் என்று கூறப்படுகிறது.
போரை நிறுத்த அமெரிக்கா முயற்சி
இஸ்ரேல் - ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் பகீரத முயற்சிகளை மேற்கொண்டார், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்காவுக்கு அழைத்து அமைதி திட்டம் ஒன்றையும், கொடுத்தார் டிரம்ப். இதை இஸ்ரேல் ஏற்ற நிலையில், ஹமாசும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டது.
இஸ்ரேல் - ஹமாஸ் பேச்சுவார்த்தை
அடுத்த கட்டமாக இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை, எகிப்தில் மும்முரமாக நடந்தது. இதில் முக்கிய முடிவுகள் எட்டப்பட்டன. இது தொடர்பாக அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” இஸ்ரேலும், ஹமாஸும் அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன என்பதை அறிவிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இதனால் அனைத்து பிணைக் கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள்.
மேலும் படிக்க : இறக்குமதி லாரிகளுக்கு 25% வரி : மீண்டும் அதிரடி காட்டும் டிரம்ப்
போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு
அமைதியை உருவாக்க, முதல்கட்ட ஒப்பந்தத்தின் படி தனது பாதுகாப்பு படையினரை இஸ்ரேல் திரும்ப பெறும். அனைத்து தரப்பினரும் நியாயமாக நடத்தப்படுவார்கள். அரபு, முஸ்லிம் நாடுகள், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கும் இது ஒரு சிறந்த நாள். இதற்காக, எங்களுடன் இணைந்து பணியாற்றிய கத்தார், எகிப்து மற்றும் துருக்கியின் மத்தியஸ்தர்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். அமைதியை ஏற்படுத்துபவர்கள் பெருமைப்படுத்தப்படுவார்கள்” இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
==============