நிகழ்ச்சியில் பேசிய முர்மு
President Droupadi Murmu on Left Wing Terrorism : சத்தீஷ்கார் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள அம்பிகாபூர் பகுதியில் நடைபெற்ற ‘ஜன்ஜாதியா கவுரவ் திவாஸ்’ என்ற நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “சத்தீஷ்கார் மற்றும் நாடு முழுவதும் நக்சல்கள், இடதுசாரி பயங்கரவாதத்தின் பாதையை கைவிட்டு, வளர்ச்சியின் பாதையில் இணைந்து வருகின்றனர். மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளால், இடதுசாரி பயங்கரவாதம் ஒழிக்கப்படும்.
கிரிக்கெட் வீராங்கனையை குறிப்பிட்ட திரவுபதி முர்மு
பழங்குடியின தலைவர்களின் கொள்கைகளை பின்பற்றுவதன் மூலம், சத்தீஷ்கார் மக்கள் வலுவான, தன்னம்பிக்கை கொண்ட மற்றும் வளர்ந்த இந்தியாவை கட்டியெழுப்புவதற்கு விலைமதிப்பற்ற பங்களிப்பைச் செய்வார்கள் என்ற நம்புவதாக தெரிவித்த அவர், பெண்களே சமூகத்தின் அடித்தளமாவார்கள். அவர்கள் முன்னேறும்போது, சமூகம் முன்னேறுகிறது.
சமீபத்தில் உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகளை சந்தித்தேன். அப்போது பழங்குடியினத்தை சேர்ந்த வீராங்கனை கிராந்தி கவுட் கூறுகையில், கடுமையான உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் இந்திய அணியில் தனக்கு இடம் கிடைத்ததாக கூறினார்.
கிராந்தியின் பயணம் சவால்களால் நிறைந்திருந்தது. ஆனால் அவர் தனது தைரியம் மற்றும் விடாமுயற்சியின் மூலம், ஊக்கமளிக்கும் உதாரணமாக உருவெடுத்துள்ளார்.
பாரம்பரிய விளையாட்டுக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்
நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு, குறிப்பாக பழங்குடி சமூகத்தின் மகள்களுக்கு, கடின உழைப்பு மற்றும் உறுதிப்பாட்டின் புரட்சிகரமான உதாரணத்தை கிராந்தி கவுட் வழங்கியுள்ளார்.
பழங்குடி சமூகங்கள் எப்போதும் விளையாட்டுகளில் மிகுந்த ஆர்வத்தையும், திறமையையும் காட்டியுள்ளனர். அதே சமயம், பாரம்பரிய விளையாட்டுகள் மறைந்து போகாமல் பாதுகாக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.