
பழங்குடி மக்களின் நாயகர் சிபு சோரன் :
Jharkhand Former CM Shibu Soren Passed Away : வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான ஜார்க்கண்ட் பழங்குடி மக்கள் நிறைந்த மாநிலமாகும். அவர்களின் குருவாக, முகமாக கருதப்படுபவர் சிபு சோரன். சந்தால் சமூகத்தைச் சேர்ந்த இவர், பீகாரின் ராம்கர் மாவட்டத்தில் பிறந்தவர். ஒன்றுபட்ட பீகாரில் 1972 ஆம் ஆண்டு ஏ.கே. ராய் மற்றும் பினோத் பிஹாரி மகாதோவுடன் இணைந்து பழங்குடி மக்களின் உரிமைகளை மீட்க ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா என்ற கட்சியை நிறுவினார். இது அவரது அரசியல் வாழ்க்கையின் முக்கிய கட்டமாக அமைந்தது.
எட்டு முறை எம்பியாக இருந்தவர் :
8 முறை சிபு சோரன் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2 முறை ராஜ்யசபா எம்.பி.யாகவும் இருந்தார். முன்னாள் பிரதமர் மன்மோகன் தலைமையிலான அமைச்சரவையின் போது, ஷிபு சோரன் மத்திய நிலக்கரி துறை அமைச்சராக பணியாற்றினார். 2000 ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் தனி மாநிலம் உருவான பின்னர் முதல் முறையாக முதல்வராக பதவியேற்றார்.
ஜார்க்கண்டின் வலிமையான தலைவர் :
சிபு சோரனுக்கு எதிராக ஆள் கடத்தல் வழக்கு பாய்ந்தது. இதில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். 1980ம் ஆண்டில் தும்கா தொகுதியிலிருந்து முதன்முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷிபு சோரன், அந்த தொகுதியை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் வலுவான கோட்டையாக மாற்றினார். ஆனால், 2019 தேர்தலில் பாஜக வேட்பாளர் நலின் சோரனிடம் 45,000 க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதைத்தொடர்ந்து தீவிர அரசியலில் இருந்து சிபு சோரன் விலகி இருந்தார்.
சிறுநீரக கோளாறால் உடல்நிலை பாதிப்பு :
சிறுநீரக பாதிப்பு காரணமாக கடந்த சில வருடங்களாக அவ்வப்போது மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்தார். 81 வயதாகும் அவருக்கு உடல்நிலை மேலும் மோசமானதை அடுத்து, ஜூன் கடைசி வாரத்தில் டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து சில நாட்களாக அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. ஆயினும் சிகிச்சை பலனின்றி இன்று அவரது உயிர் பிரிந்தது.
மேலும் படிக்க : தொழிலாளி முதல் முதலமைச்சர் வரை : ஆளுமையின் வரலாறு VS அச்சுதானந்தன்
சிபு சோரன் மகன் ஹேமந்த் சோரன் :
சிபு சோரன் மகனான் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முதல்வராக இருக்கிறார். தனது தந்தையின் மரணம் குறித்து அவர் வெளியிட்ட பதிவில், “மதிப்பிற்குரிய குரு நம் அனைவரையும் விட்டுச் சென்றுவிட்டார். இன்று, எனக்கு பெரிய வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது.” என்று தெரிவித்துள்ளார்.
====