கர்நாடக அரசு வழக்கு
Supreme Court Approves Mekedatu Dam Project Case : காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி கர்நாடக அரசு தொடர்ந்த வழக்கு, இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் வாதிடுகையில், மேகதாது அணை கட்டப்பட்டால் லட்சக்கணக்கான விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும், அணைக்கான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய நீர் ஆணையம் எந்த அனுமதியும் வழங்க இயலாது என்றும் எடுத்துரைத்தார்.
கர்நாடகாவில் போதுமான அணைகள் உள்ளன
மேலும், காவிரியின் குறுக்கே ஏற்கனவே போதுமான அணைகள் கர்நாடகாவில் உள்ளன, புதிய அணை தேவையில்லை என்றும் வலுவான வாதத்தை முன்வைத்தார். அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு புதுச்சேரி மற்றும் கேரள அரசுகளும் நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும், தலைமை நீதிபதி அமர்வு மேகதாது அணை கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. மேகதாது அணை திட்ட அறிக்கை மேகதாது அணை கட்டுமானத்திற்கு திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகா அனுமதி கோருவதை எதிர்த்து தமிழ்நாடு கூறும் அம்சங்கள் அனைத்தும் மிகவும் ஆரம்ப கட்டமானவை என தலைமை நீதிபதி அமர்வு குறிப்பிட்டது.
கருத்துகளைக் கேட்ட பிறகே மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும்
எனவே, திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய நீர் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படும் போது, தமிழ்நாடு அரசு, காவிரி மேலாண்மை ஆணையம் (CWMA), ஒழுங்காற்றுக் குழு (RRC) ஆகியவற்றின் கருத்துகளைக் கேட்ட பிறகே மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
தண்ணீர் வழங்கவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பாகும்
காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளை கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளும் முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் எச்சரிக்கையாக, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரை வழங்கவில்லை என்றால் அது நீதிமன்ற அவமதிப்பாகும் என்றும் தலைமை நீதிபதி அமர்வு தெளிவுபடுத்தியது.
மேகதாது அணை திட்டம் தமிழகத்தை பாதிக்காது
மேகதாது தொடர்பாக தற்போது உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் முடித்து வைக்கப்படுகின்றன என்றும் உத்தரவிடப்பட்டது. முன்னதாக, மேகதாது அணைத் திட்டம் தமிழகத்தைப் பாதிக்காது என்றும், காவிரி நீரைத் திறந்து விடுவதில் சமநிலைப்படுத்தும் நோக்கிலேயே புதிய அணை கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.