காவிரியில் உரிமை காப்பதில் திமுக அரசு படுதோல்வி ; அன்புமணி ஆவேசம்

Anbumani Ramadoss on Mekedatu Dam Case : மேகதாது அணை தொடர்பான வழக்கில் தமிழக உரிமையை காப்பதில் திமுக அரசு படுதோல்வி அடைந்து விட்டதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டி இருக்கிறார்.
Anbumani accused DMK government failing to protect Tamil Nadu's rights in Mekedatu Dam case
Anbumani accused DMK government failing to protect Tamil Nadu's rights in Mekedatu Dam caseGoogle
2 min read

மேகதாது அணை - கர்நாடக அரசு

Anbumani Ramadoss on Mekedatu Dam Case : இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்த கர்நாடக அரசு அதை கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்தது. அதை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பிய மத்திய நீர்வள ஆணையம், விரிவான திட்ட அறிக்கையின் அடிப்படையில் மேகதாது அணை கட்ட அனுமதி அளிப்பது குறித்து பரிந்துரைக்கும்படி கேட்டுக்கொண்டது.

காவிரி மேலாண்மை ஆணையம்

எனினும், அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட தமிழக கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, விரிவான திட்ட அறிக்கை குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டங்களில் விவாதிக்கக் கூடாது என்று தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அதனால், விரிவான திட்ட அறிக்கை பற்றி நீண்ட காலமாக விவாதிக்கப்படாமல் இருந்த நிலையில், அது குறித்து மத்திய நீர்வள ஆணையமே முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறிய மேலாண்மை ஆணையம், அந்த அறிக்கையையும் திருப்பி அனுப்பி விட்டது.

தமிழக அரசின் மறுப்பு

இத்தகைய சூழலில் தான் மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கை குறித்து, மேலாண்மை ஆணையம் விவாதிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்ட நீதிபதிகள், மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் விவாதிக்க தடையில்லை என்று ஆணையிட்டனர்.

உச்ச நீதிமன்றம் அனுமதி

விரிவான திட்ட அறிக்கை குறித்து தமிழகத்தின் கருத்தைக் கேட்டுத் தான் முடிவெடுக்க வேண்டும் என ஆணையிட்ட நீதிபதிகள், ஒருவேளை விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அணை கட்ட அனுமதி வழங்கப்பட்டால் அப்போது தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என்றும் கூறியுள்ளனர்.

தவறி விட்ட தமிழக அரசு

இந்த வழக்கில் வலிமையான வாதங்களை முன்வைக்கத் தமிழக அரசு தவறியது தான் இதற்கு காரணம் ஆகும். இதன் மூலம் காவிரியில் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாப்பதில் திமுக அரசு படுதோல்வி அடைந்திருக்கிறது.

வலிமையாக எதிர்க்கவில்லை

இந்த வழக்கு விசாரணையின் போது, மத்திய நீர்வளத்துறை அமைச்சராக இருந்த உமாபாரதி அளித்த வாக்குறுதி குறித்தும், அதை மீறி மேகதாது அணை குறித்த வரைவுத் திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கப்பட்டது

சட்டவிரோதம் என்பதையும் உச்சநீதிமன்றத்தில் வலிமையாக வாதிட்டிருக்க வேண்டும். ஆனால், அதை செய்யத் தவறிய தமிழக அரசு வழவழ வாதங்களை முன்வைத்ததும் தான் இன்றையத் தீர்ப்புக்கு காரணம்.

தமிழக மக்களுக்கு துரோகம் இழைப்பதா?

தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்யும் வழக்கத்தை திமுக அரசு கைவிட வேண்டும். உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுத் தாக்கல் செய்து, மேகதாது அணை குறித்த வரைவுத் திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கப்பட்டதையும், அதனடிப்படையில் விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதையும் செல்லாது என அறிவிக்கக் கோர வேண்டும்.

இந்த முறையாவது வலிமையான வாதங்களை முன்வைத்து காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை அரசு காக்க வேண்டும்.” இவ்வாறு அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

==================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in