வக்ஃப் சட்டத் திருத்தம் :
Supreme Court on WAQF Act Amendment Bill 2025 : இந்தியாவில் இஸ்லாமியர்கள் தானமாக, நன்கொடையாக வழங்கும் சொத்துகள், நிலங்களை வக்ஃப் வாரியம் நிர்வகித்து வருகிறது. இந்தநிலையில், வக்ஃப் சொத்துகளை நிர்வகிப்பதை சீரமைக்கும் நோக்கத்துடன், 1995ம் ஆண்டு வக்ஃப் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில், மத்திய அரசு வக்ஃப் சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தது.
உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணை
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 70க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. விசாரணையின் போது மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபில், சிங்வி என பல்வேறு தரப்பினரும் பல முக்கிய வாதங்களை முன்வைத்தனர். இந்நிலையில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணை நடைபெற்றது. வக்ஃப் வாரிய சட்டத்திருத்தத்திற்கு முழுமையாக தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.
அவர்கள் அளித்த தீர்ப்பின் விவரம் வருமாறு :
1. வக்பு வாரியத்திற்கு சொத்து வழங்க 5 ஆண்டு இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு தடை(WAQF Act Amendment Bill 2025 Judgement) விதிக்கப்படுகிறது.
2. ஒருவர் இஸ்லாம் மதத்தை பின்பற்றுவதை முடிவு செய்யும் விதிகளை மாநில அரசு வகுக்கும் வரை தடை தொடரும்.
3. வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாது உறுப்பினர் எண்ணிக்கை 3க்கு மேல் இருத்தல் கூடாது.
4. முழு சட்டத்தையும் நிறுத்தி வைக்க முகாந்திரமில்லை. சில பிரிவுகளுக்கு மட்டும் தற்காலிக தடை விதிக்கப்படுகிறது.
5. தனிப்பட்ட குடிமக்களின் உரிமைகளை முடிவு செய்ய மாவட்ட ஆட்சியரை அனுமதிக்க முடியாது, இது அதிகாரப் பிரிவினையை மீறும் செயலாகும்.
6. வக்ஃப் சொத்து அரசாங்க சொத்தா என தீர்மானித்து, உத்தரவு பிறப்பிக்கும் மாவட்ட ஆட்சியரின் அதிகாரம் நிறுத்தி வைக்கப்படுகிறது.
7. தீர்ப்பாயத்தால் தீர்ப்பு வழங்கப்படும் வரை, எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக மூன்றாம் தரப்பு உரிமைகளை உருவாக்க முடியாது.
8. வக்ஃப் வாரிய தலைமை நிர்வாக அதிகாரி முடிந்தவரை ஒரு இஸ்லாமியராக இருக்க வேண்டும் என்று கருதுகிறோம்” இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்து இருக்கிறார்கள்.
மேலும் படிக்க : 14 கோடி உறுப்பினர்கள், மிகப்பெரிய கட்சி BJP : JP நட்டா பெருமிதம்
மத்திய அரசு வரவேற்பு :
வக்ஃப் திருத்தச் சட்டம்(WAQF Amendment Act Bill 2025) குறித்த முழுமையான விசாரணைக்குப் பிறகு இன்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்பதாக, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்து இருக்கிறார். நாடாளுமன்றம் குறித்து உச்ச நீதிமன்றத்திற்கு முழுமையாக தெரியும். மத்திய அரசு வழக்கறிஞர் சட்டத்தின் விதிகள் மற்றும் நோக்கங்களை நீதிமன்றத்தில் விரிவாக, தெளிவாக முன்வைத்துள்ளார். அதன்படி ஜனநாயகத்திற்கு மிகவும் நல்ல முடிவை நீதிமன்றம் எடுத்து இருக்கிறது. எந்தவொரு சட்டமும் நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் போது, அதை நிராகரிக்க முடியாது. இதைத்தான் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது” என்று கூறினார்.
===========