பிகார் தேர்தல் 2025 :
Bihar Assembly Election 2025 Voting Percentage in Tamil : பிகார் மாநிலத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்து இருக்கிறது. 14ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாக இருக்கின்றன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் மீண்டும் என்டிஏ ஆட்சி அமைக்கும் என்று கூறுகின்றன.
அதிக வாக்குகள் பதிவு
பிகார் சட்டமன்றத் தேர்தலில் 66.91% வாக்குப்பதிவு பதிவாகி வரலாற்று சாதனை படைத்துள்ளது. 1951ஆம் ஆண்டுக்கு பிறகு இதுவே மிக உயர்ந்த அளவில் பதிவான வாக்கு சதவீதம் என்று தேர்தல் ஆணையம் (ECI) அறிவித்துள்ளது.
பெண்களுக்கான திட்டங்கள்
பிகாரை பொருத்துவரை ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம். எனவே, தான் நிதிஷ்குமார் தலைமையிலான என்டிஏ கூட்டணி அரசு பல்வேறு நலத்திட்டங்களை அவர்களுக்கு வாரி வழங்கி இருக்கிறது. தேஜஸ்வி தலைமையிலான இந்தியா கூட்டணியும், வாக்குறுதிகள் என்ற பெயரில் பெண்களுக்கு சலுகைகளை அறிவித்து இருந்தது.
பெண்கள் அதிக அளவில் வாக்களிப்பு
எனவே, இந்த முறை பெண்கள் அதிக அளவில் வாக்களித்து கெத்து காட்டி இருக்கிறார்கள். ஆண்களை விடப் பெண் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களித்ததே கூடுதல் வாக்குப்பதிவு வரலாற்றுச் சாதனைக்கு முக்கிய காரணம் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாராட்டு தெரிவித்தார்.
வாக்களிக்க பெண்கள் ஆர்வம்
பிகார் மாநிலத்தின் ஒட்டுமொத்தப் பெண் வாக்காளர் விகிதம் 71.6% ஆக உயர்ந்துள்ளது. ஆண்களின் மொத்த வாக்குப்பதிவு விகிதம் 62.8% ஆக இருக்க, பெண்களின் வாக்குப்பதிவு விகிதம் 71.6% ஆக உள்ளது. ஆண்களை விட பெண்கள் 9 சதவீதம் கூடுதலாக வாக்குப்பதிவு செய்துள்ளனர்.
நவம்பர் 6ஆம் தேதி நடந்த முதற்கட்ட வாக்குப்பதிவில் பெண்கள் 69.04% வாக்களித்தனர், ஆண்கள் 61.56% மட்டுமே வாக்களித்தனர். நவம்பர் 11ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் பெண்களின் வாக்குப்பதிவு மேலும் அதிகரித்து 74.03% ஆக இருந்தது. ஆண்களின் வாக்குப்பதிவு 64.1 சதவீதம் தான்.
சாதனையை முறியடித்த பெண்கள்
2010 மற்றும் 2015ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் கூட ஆண்கள் தான் அதிகம் வாக்களித்து இருந்தனர். கல்வியறிவு அதிகரிப்பு, வேலை வாய்ப்புகள், நலத் திட்டங்கள் பெண்கள் அதிக அளவில் வாக்களிக்க தூண்டியதாக தெரிய வந்துள்ளது.
மாவட்டங்களில் வாக்குப்பதிவு விவரம்
முசாபர்பூர், சமஸ்திபூர் உட்பட 10 மாவட்டங்களில் 70%க்கும் அதிகமாக வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. மாவட்டங்கள் அடிப்படையில் பார்க்கும்போது, அதிகபட்சமாக கதிஹாரில் 78.84% வாக்குகள் பதிவாகியுள்ளன. கிஷன் கஞ்சில் 78.15%, பூர்னியாவில் 76.14% வாக்குப்பதிவு நடந்துள்ளது.
வெளிப்படையான தேர்தல்
பெண்கள் அதிக அளவில் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தி இருப்பதன் மூலம், ”வெளிப்படையான, அமைதியான தேர்தல் நடந்து இருக்கிறது. இதன் மூலம் இந்தியா கூட்டணியின் பொய் பிரசாரங்களும் முறியடிக்கப்பட்டு இருக்கின்றன.
=====