சபரிமலை மண்டல பூஜை
Sabarimala Mandala Pooja 2025 : உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல கால பூஜைகள் நவம்பர் 17ம் தேதி துவங்குகிறது. இதற்காக 16ம் தேதி மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 62 நாட்கள் தொடர்ச்சியாக நடக்கும் இந்த சீசனில் பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. sabarimalaonline.org என்ற இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம்.
தினமும் 90,000 பக்தர்கள் அனுமதி
தினமும் 70 ஆயிரம் பக்தர்களுக்கு ஆன்லைன் மூலமும், 20 ஆயிரம் பக்தர்களுக்கு ஸ்பாட் புக்கிங் மூலமும் ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
விபத்து இன்சூரன்ஸ் விரிவாக்கம்
பக்தர்களுக்கான விபத்து இன்சூரன்ஸ் திட்டம் கேரளாவில் கடந்த ஆண்டு நான்கு மாவட்டங்களில் மட்டுமே அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஆண்டு கேரளாவில் எந்த பகுதியில் விபத்து நடந்தாலும் ரூ.5 லட்சம் ரூபாய் காப்பீடு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்சூரன்ஸ் திட்டம் சபரிமலையில் பணிபுரியும் தேவசம்போர்டு நிரந்தர மற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கும் பிற அரசுத்துறை ஊழியர்களுக்கும் விரிவாக்கமும் செய்யப்பட்டுள்ளது.
இழப்பீட்டு தொகை
சபரிமலை பயணத்தில் மரணமடையும் பக்தர்களின் உடலை கேரளாவுக்குள் கொண்டு செல்ல ரூ.30 ஆயிரமும், வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல ரூ.ஒரு லட்சமும் ஆம்புலன்ஸ் கட்டண தொகையாக வழங்கப்படும்.
பக்தர்கள் நிதி தர அனுமதி
நிலக்கல் முதல் சன்னிதானம் வரை உள்ள பாதைகளில் மாரடைப்பு உள்ளிட்ட நோய்களில் மரணம் அடையும் பக்தர்களுக்கு இதுவரை உதவித்தொகை வழங்கப்படவில்லை. இந்தாண்டு இவ்வாறு மரணம் அடைபவர்களுக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். இதற்காக விருச்சுவல் கியூ முன்பதிவு செய்யும் பக்தர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நிதி வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் முன்பதிவு பரிசீலனை
இன்சூரன்ஸ் உதவித்தொகை கிடைப்பதற்கு அடிப்படையாக ஆன்லைன் புக்கிங் முன்பதிவு கூப்பன் பரிசீலிக்கப்படும் என்பதால் அனைத்து பக்தர்களும் ஆன்லைன் முன்பதிவு செய்யும்படி திருவிதாங்கூர் தேவசம்போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.
பக்தர்கள் தங்க முகாம்கள்
சபரிமலைக்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க காத்திருக்கும் வகையில் 10 ஆயிரம் தங்கம் அளவுக்கு முகாம்கள் அமைக்கப்படுகின்றன. அங்கு அடிப்படை வசதிகள் இருக்கும் வகையிலும், உணவு வழங்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, ஒரு நாள் காத்திருந்தாலும் பக்தர்கள் எந்த இன்னலும் இன்றி ஐயப்பனை வழிபட்டு செய்ய முடியும்.
=======