சபரிமலை கோவிலின் சிறப்பு
Sabarimala Ayyappa Temple Opening 2025 Dates for Mandala Poojai : மற்ற கோவில்களை போன்று, சபரிமலை ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படுவது கிடையாது. புகழ்பெற்ற இந்தக் கோவிலுக்கு செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பனை வழிபடுவது தான் வழக்கம். ஒவ்வொரு மாதத்தின் முதல் 5 நாட்கள் கோயிலின் நடை திறக்கப்பட்டு ஆராதனை நடைபெறும்.
மகர விளக்கு, மண்டல பூஜைகள்
ஆனால், வருடத்திற்கு இரண்டு முறை அதாவது மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைகளின் போது மட்டும் கோவில் நடை அதிக நாட்கள் திறந்து இருக்கும். அப்போது பக்தர்கள் லட்சக்கணக்கில் வந்து, ஐயப்பனை வழிபட்டுச் செல்வர்.
41 நாட்கள் மண்டல பூஜை
மண்டல பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பூஜைகள் மேற்கொள்ளப்படும். நாளைமறுநாள் காலை முதல் மண்டல பூஜைகள் தொடங்கும். 41 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர், ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டல பூஜைகள் நிறைவுக்கு வரும்.
தினமும் 90,000 பக்தர்கள் தரிசனம்
தினமும் 90 ஆயிரம் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வரும் 70 ஆயிரம் பேர், நேரடியாக வரும் 20 ஆயிரம் சபரிமலை ஏறி ஐயப்பனை வழிபடலாம். கூடுதலாக வரும் பக்தர்கள் பம்பையில் தங்கியிருந்து அடுத்த நாள் ஐயப்பனை தரிசிக்க செல்லலாம். அந்த வகையில் மண்டல பூஜை சீசனின் போது மட்டும், லட்சக் கணக்கானோர் வழிபாடு நடத்துவார்கள்.
மண்டல பூஜை விவரங்கள் :
நாளை மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்பார்கள். சபரிமலை மேல்சாந்தியாக பிரசாத்தும், மாளிகைப்புரம் மேல்சாந்தியாக மனு நம்பூதிரியும் பொறுப்பேற்பர்.
மண்டல கால பூஜைகள் நாளை மறுநாள் ( 17ம் தேதி ) தொடங்குகின்றன. 41 நாட்கள் நடைபெறும். புதிய மேல்சாந்திகள் முக்கிய பூஜைகளை நடத்துவார்கள்.
டிசம்பர் 27ம் தேதி பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது.
அன்றுடன் 41 நாள் மண்டல காலம் நிறைவடையும். இதுவரை 22 லட்சம் பேர் முன்பதிவு செய்திருக்கிறார்கள்.
18,741 போலீசார் பாதுகாப்புப் பணியில்
ஈடுபடுத்தப்படுவார்கள். குற்றச்செயல்களை தடுக்க ஏஐ கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்தப்படும்.
நாளை முதல் தினமும் 18 மணிநேரம் நடை திறந்திருக்கும். அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்படும். பின்னர் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு நடை சாத்தப்படும்.
பக்தர்கள் வருகை அதிகரித்தால் இரவு நடை சாத்தப்படும் நேரம் கூட்டப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
கார்த்திகை ஒன்றாம் தேதி நாளை பிறப்பதால், சபரிமலைக்கு செல்வோர் மாலை அணிந்து விரதம் மேற்கொள்ள தொடங்குவார்கள்.
====