Sabarimala Ayyappan Temple Opening Dates 2025 for pujas, President Murmu visit Sabarimala Ayyappa temple on 22nd 
ஆன்மிகம்

சபரிமலை கோவில் நடை திறப்பு : 22ம் தேதி ஜனாதிபதி முர்மு தரிசனம்

President Droupadi Murmu Visit Sabarimala Ayyappa Temple : ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை நாளை திறக்கப்படும் நிலையில், ஜனாதிபதி முர்மு 22ம் தேதி சுவாமி தரிசனம் செய்கிறார்.

Kannan

சபரிமலை ஐயப்பன் கோவில்

President Droupadi Murmu Visit Sabarimala Ayyappa Temple : உலகப் புகழ் பெற்ற கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜையின் போது லட்சக் கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்வார்கள். இது மட்டுமின்றி ஒவ்வொரு மாத பிறப்பின் போது, கோவில் நடை திறக்கப்படும் போது, பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

18ம் தேதி மேல்சாந்திகள் தேர்வு

அந்த வகையில், ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை திறக்கப்படுகிறது. மண்டல கால பூஜைகள் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளது. எனவே, நாளை மாலை கோவில் நடை திறக்கப்பட்ட பிறகு, 18ம் தேதி சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் கோயில்களுக்கான புதிய மேல்சாந்திகள் தேர்வு நடைபெறுகிறது.

சபரிமலை கோவிலுக்கு 14 பேரும், மாளிகைப்புரம் கோவிலுக்கு 13 பேரும் ஏற்கனவே நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவர் குடவோலை முறைப்படி புதிய மேல்சாந்திகளாக தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தான் கார்த்திகை 1ம் தேதி முதல் அடுத்த ஒரு ஆண்டுக்கு சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் கோவில்களில் முக்கிய பூஜைகளை முன்னின்று நடத்துவார்கள்.

சபரிமலை செல்லும் ஜனாதிபதி

21ம் தேதி சித்திரை ஆட்டத்திருநாள் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. 22ம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலையில் தரிசனம் செய்கிறார். அன்று காலை திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் செல்லும் அவர் பின்னர் அங்கிருந்து கார் மூலம் பம்பை செல்கிறார்.

மேலும் படிக்க : அக். 22ம் தேதி சபரிமலை ஐயப்பனை தரிசிக்கிறார் ஜனாதிபதி முர்மு

ஐயப்பனை வழிபடுகிறார் திரௌபதி முர்மு

12 மணியளவில் பம்பையில் இருந்து தேவசம் போர்டின் ஜீப்பில் சன்னிதானம் செல்லும் அவர், தரிசித்த பின்னர் விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார். பின்னர் 3 மணியளவில் சன்னிதானத்தில் இருந்து புறப்பட்டு நிலக்கல் சென்ற பிறகு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு 22ம் தேதி சபரிமலையில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன. அன்று இரவு 10 மணிக்கு சபரிமலை கோவில் நடை சாத்தப்படும். இந்திய ஜனாதிபதி ஒருவர் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்வது இதுவே முதன்முறை

-----------------------