எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
EPS on AIADMK TVK Alliance : தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல் நபராக பிரசாரத்தை தொடங்கி, 170க்கும் அதிகமான தொகுதிகளில் பொதுமக்களை சந்தித்து விட்டார். ”மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் அவர் மேற்கொண்டு வரும் பிரசார பொதுக்கூட்டம் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது.
ஆளுங்கட்சிக்கு கேள்வி
ஆளும் கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை விமர்சித்து பேசிய பழனிசாமி, “அண்மையில் கரூரில் ஒரு துயர சம்பவம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 41 அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் அவசர அவசரமாக ஆளும் கட்சி தனிநபர் ஆணையம் அமைத்து விசாரணையைத் தொடங்கி உள்ளது. ஆனால் கிட்னி முறைகேடு தொடர்பாக எந்தவித விசாரணையும் நடைபெறவில்லை.
கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை
ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்ட பின்னர் அந்த விவகாரம் தொடர்பாக பொதுவெளியில் ஆழமாக பேசப்படக் கூடாது என்பது விதி. ஆனால் அதனை மீறும் விதமாக ஆணையம் அமைத்த திமுகவினரே இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து பேசி வருகின்றனர். இதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது. இந்த விவகாரத்திற்கு பாதுகாப்பு குறைபாடு தான் காரணம் என்று சொல்கிறார்கள். அதனால் தான் சிபிஐ விசாரணைக் கோருகிறோம் என்று எடப்பாடி தெரிவித்தார்.
மேலும் படிக்க : ADMK Alliance : 210 தொகுதிகளில் வெற்றி நிச்சயம் : எடப்பாடி உறுதி
TVK உடன் அதிமுக கூட்டணி?
திமுகவினர் கூட்டணியை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். கூட்டணி முக்கியம் தான். ஆனால் கூட்டணி மட்டுமே வெற்றியை தேடித்தரும் என்று நினைக்காதீங்க. அதிமுக தலைமையில் அமைக்கப்படுகின்ற கூட்டணி வலுவாக கூட்டணியாக இருக்கும் என்று கூறிய போது அங்கு அசைக்கப்பட்ட தமிழக வெற்றி கொடியை பார்த்து “அங்க பாருங்க கொடி பறக்குது, பிள்ளையார் சுழி போட்டாச்சு, குமாரபாளையத்தில் ஏற்பட்டுள்ள எழுச்சி, ஆரவாரம் ஸ்டாலினின் செவியை கிழித்துக் கொண்டு செல்லப்போகிறது” என்று கூறி தவெக உடனான கூட்டணி தொடர்பாக மறைமுகமாக தெரிவித்தார். எடப்பாடியின் இந்தப் பேச்சு அதிமுகவினரை உற்சாகப்படுத்தி இருக்கிறது.
=============