
Edappadi Palanisamy on TN Election 2026 : தமிழக சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. ஒருபக்கம் திமுக கூட்டணி, மறுபக்கம் அதிமுக கூட்டணி, தனித்து போட்டியிடும் சீமான், தனது தலைமையில் கூட்டணி என உறுதியுடன் நிற்கும் விஜய் என பரபரப்பு பஞ்சமே இல்லை.
வெளிநாட்டு முதலீடு, வெள்ளை அறிக்கை எங்கே? :
இந்த நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி(Edappadi Palanisamy Interview with PTI), “ 5 முறை வெளிநாடு சென்ற முதல்வர் ஸ்டாலின், எவ்வளவு தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டது, எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின, அவை நடைமுறைக்கு வந்து விட்டதா? திமுக ஆட்சிக்கு வந்த 52 மாத ஆட்சியில் எவ்வளவு தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டது, எவ்வளவு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன? எத்தனை தொழில்கள் நடைமுறைக்கு வந்தன? அதனுடைய நிலவரம் என்ன? எத்தனை தொழில் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது? அதனால் எவ்வளவு இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர்? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் வெள்ளை அறிக்கை விட வேண்டும் என்று பலமுறை தெரிவித்தேன். இதுவரைக்கும் பதிலே இல்லை.
அதிமுக ஆட்சியில் முதலீடுகள், தொழில்கள் :
அதிமுக ஆட்சியில், 2015ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் நடத்தப்பட்டது. அதில் 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டது. 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, அவை நடைமுறைக்கு வந்தன.
இதேபோன்று, 2019 ஜனவரி மாதம் தொழில் முதலீட்டாளர் மாநாட்டை சென்னையில் நடத்தி சுமார் 3 லட்சத்து 5000 கோடி தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டு 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டு. நடைமுறைப்படுத்தப்படன.
திமுகவின் முதலீடு ஈர்ப்பு, பொய் வாக்குறுதிகள் :
புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட உன், தொழில் வந்து விடுவது கிடையாது. அதற்கு முதல்கட்ட பணிகள் செயல்படுத்த வேண்டும். அந்த முதல்கட்ட பணி செய்வதற்கே 2 வருட காலம் பிடித்துவிடும். அதற்கு பிறகு அவர்கள் அதில் முதலீடு செய்து அதற்கு உண்டான தொழிற்சாலைகள் கட்டப்பட்டு, பிறகுதான் பயன்பாட்டுக்கு வரும்.
ஆனால், இன்றைய ஆட்சியாளர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட உடனேயே தொழில் முதலீடு வந்ததாகவும் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்ததாகவும் கூறுவது பொய்யான செய்தியை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் சமூக நீதி எங்கே? :
திமுக ஆட்சி அமைந்த பிறகு, சமூக நீதி தமிழகத்திலே மறுக்கப்பட்டு விட்டது. திண்டிவனம் பகுதியில் ஒரு நகராட்சியில் நடந்த சம்பவம். நகராட்சியில் ஒரு இளநிலை உதவியாளர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்.
அவரை நகராட்சி ஆணையாளர் அறைக்கு வரச்சொல்லி, அறையில் திமுக பெண் கவுன்சிலர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த காட்சியை பார்த்தும். அவருக்கு அநீதி இழைக்கப்பட்டு இருக்கிறது.
அதிமுக - திமுக இடையே தான் போட்டி :
தமிழக மக்கள் சிந்திக்கக் கூடியவர்கள். தமிழகத்தில் 2 தான் பெரிய கட்சிகள். அந்த 2 கட்சிகள் தான் இப்போதும் ஆட்சி செய்து இருக்கின்றன. அவர்களுக்கு இடையே தான்போட்டி. அவை எந்தக் கட்சிகள் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். அதிமுகவை பொறுத்த வரைக்கும் சுமார் 31 ஆண்டுகாலம் தமிழகத்தில் ஆட்சிபுரிந்த கட்சி. அதிமுக ஆட்சிக்காலத்தில் தான் தமிழகம் இந்தியாவிலே சிறந்த மாநிலம் என்ற பெயர் பெற்றது.
தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி :
திமுகவின் 4 ஆண்டுகாலம் ஆட்சியிலே இன்றைக்கு எந்த ஒரு பெரிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை. மக்கள் விரோத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பாலியல் வன்கொடுமைகள், விவசாயிகள் போராட்டம், அரசுஊழியர் போராட்டம் என மக்கள் நம்பிக்கையை திமுக இழந்து வருகிறது.
210 தொகுதிகளில் வெற்றி உறுதி :
எனவே, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி, சுமார் 210 இடங்களில் வெற்றி பெறும். பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும். மேகதாது அணை விவகாரத்தை திமுக அரசு கைவிட்டு விட்டது எனக் கருதுகிறேன்.
மேலும் படிக்க : ADMK: அதிமுகவில் இருந்து ’செங்கோட்டையன் நீக்கம்’ : எடப்பாடி அதிரடி
மேகதாது அணை - திமுக அலட்சியம் :
மேகதாது அணை விவகாரத்தை பொறுத்தவரைக்கும் அதிமுக ஆட்சி இருக்கும் வரை நீதிமன்றம் வரை நாங்கள் நடவடிக்கை எடுத்துக கொண்டு இருந்தோம். இன்றைய அரசாங்கம் அதில் முழு கவனம் செலுத்தவில்லை என்று தான் கருதுகின்றேன். தமிழக மக்கள் மீது அக்கறை இருக்குமானால், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக கர்நாடக காங்கிரசுக்கு நெருக்கடி கொடுத்து, அணை கட்டப்படுவதை நிறுத்தச் செய்யலாம். அணை கட்டப்பட்டால், டெல்டா பாலைவனமாகி விடும்” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார்.
=================