Street Dog Issue in Tamil Nadu 
தமிழ்நாடு

சமூக சவாலாக மாறி வரும் தெருநாய்கள் : காரணங்களும் தீர்வுகளும்

Street Dog Issue in Tamil Nadu : தெருநாய்களின் பிரச்சினை எப்படி சமூக சவாலாக உருமாறி நிற்கிறது என்பதை விவரிக்கிறது இந்தக்கட்டுரை.

MTM

Street Dog Issue in Tamil Nadu : தெருநாய்கள் என்பவை தற்போது தமிழ்நாட்டில் மட்டும் அல்ல, நாடு முழுவதும் ஒரு முக்கியமான சமூக மற்றும் சுகாதாரப் பிரச்சனை ஆகத் திகழ்கிறது. தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் தெருநாய்கள் எண்ணிக்கையிலும் தாக்கத்திலும் அதிகரித்து வருகின்றன. இது மனிதர்களின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் சுகாதாரம், மற்றும் விலங்கு உணர்வு ஆகிய மூன்றிலும் தொடர்புடையதாக அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் தெருநாய்களின் தற்போதைய நிலை :

மொத்த தெருநாய்கள் எண்ணிக்கை (2023 நிலவரப்படி) தமிழ்நாடு முழுவதும் சுமார் 25 லட்சம், சென்னையில் மட்டும் 2.5 லட்சத்திற்கும் மேல். மாநிலம் முழுவதும் நகர்ப்புறங்களில் – ஒரு சதுர கிலோமீட்டருக்கு 200-400 நாய்கள் வரை இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.தெருநாய்களால் தீவிரமாக பாதிக்கப்படும் மாவட்டங்களாக சென்னை, மதுரை ,கோயம்புத்தூர், திருச்சி, சேலம் ஆகியவை உள்ளன.

2022-23 ஆம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் சுமார் 80,000 நாய்க்கடிக்கு மருத்துவ சிகிச்சை(Dog Bite Treatment) அளிக்கப்பட்டது. அதில் சுமார் 25% பேர் குறைந்தது முதல் நிலை நாய்க்கடிவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.

அரசின் நடவடிக்கைகள் என்ன ? :

Animal Birth Control (ABC) திட்டம் என்பது அரசு மற்றும் நகராட்சி மன்றங்கள் இணைந்து நடத்தும் திட்டம். இதன் நோக்கம் தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி, பிறப்புத் தடை சிகிச்சை அளிப்பது.சென்னையில் மட்டும் 2022-23ம் ஆண்டில் 45 ஆயிரத்தும் மேற்பட்ட நாய்கள் ஸ்டெரிலைஸ் செய்யப்பட்டன.

Anti-Rabies Vaccination (ARV) திட்டம் என்பது அரசு மருத்துவமனைகள் மற்றும் நகர் நலமனைகளில் இலவசமாக நாய்க்கடியால் பாதிக்கப்பட்டோருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மருத்துவத்துறையின் புள்ளிவிவரங்கள்படி தமிழ்நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக 1.2 லட்சம் நபர்கள் நாய்க்கடிக்கு ARV பெறுகின்றனர்.

சிக்கல்கள் மற்றும் எதிர்ப்புகள் :

பெரும்பாலான இடங்களில் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் மீது தெருநாய்கள் துரத்தி தாக்குவதாக புகார்கள் வருகின்றன. சிசிடிவி காட்சிகளும் அது உண்மை என்பதை நிரூபிக்கின்றன

மருத்துவக் கழிவுகள் மற்றும் உணவுப் பண்டக் கழிவுகள், தெருநாய்கள் எண்ணிக்கையை ஊக்குவிக்கின்றன என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. தெருநாய்கள் விவகாரத்தில் விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே தொடர்ந்த கருத்து முரண்பாடுகள் உள்ளன . ஒட்டுமொத்த நாய்களையும் அகற்ற வேண்டுமா அல்லது அவற்றை ஒழுங்குபடுத்த வேண்டுமா என்பதுதான் அது.

மாநகராட்சிகளில் பண்பட்ட ABC மையங்கள் குறைபாடு, மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை, மற்றும் விலங்கு பிடி வாகனங்கள் போதாமை காணப்படுகிறது.

மேலும் படிக்க : 139 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கு ரூ. 20 கோடி ?

தெருநாய்கள் ஒரு சமூக உயிரியாகக் கருதப்பட வேண்டும் என்பதே விலங்கு உரிமை அமைப்புகளின் நிலைப்பாடு. இந்தநிலையில், தத்ரூபமான தீர்வுகள் தேவைப்படுகின்றன. அதாவது, மனித பாதுகாப்பும் விலங்கு உரிமைகளும் ஒன்றோடொன்று முரணாக அமையக்கூடாது.

சாத்தியமான தீர்வுகள் :

தொடர்ச்சியாக ABC திட்டம் (ஸ்டெரிலைசேஷன் + தடுப்பூசி) தடையின்றி செயல்படுத்தப்பட வேண்டும். உணவுப்பொருள் கழிவுகளை திறந்தவெளியில் கொட்டுவதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

நாய்க்கடிகள் அதிகம் நடக்கும் பகுதிகளில் நிலையான ARV முகாம்களை நடத்த வேண்டும். தெருநாய்களை பராமரிக்க தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து செயலாற்ற வேண்டும்.

ஆண்டுக்கு ஒருமுறை உள்ளாட்சி அமைப்புகள் தொகுதி வாரியாக தெருநாய்களை கணக்கெடுக்க வேண்டும்.

உயிரிழப்பை ஏற்படுத்துவதால் தெருநாய்கள் தமிழ்நாட்டில் ஒரு நுட்பமான சமூக சவாலாக மாறிவருகிறது. இதற்கு தற்காலிக தீர்வு பயன்தராது. அதற்குப் பதிலாக, அறிவியல் அடிப்படையிலான, சமூக உணர்வுடனும், விலங்கு நலனுடன் கூடிய தொலைநோக்குத் திட்டம் தேவை. அரசு, மக்கள், மற்றும் விலங்கு பாதுகாப்பு அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே இந்த சிக்கலை சமதளத்தில் கொண்டு வர முடியும்.