H.Raja questioned why Tamil Nadu government did not immediately purchase the paddy  Image Courtesy : H Raja X Page with Paddy Bags Damage Photo
தமிழ்நாடு

நெல் கொள்முதலில் தாமதம் ஏன் : திமுக அரசுக்கு எச். ராஜா கேள்வி

H Raja Questions DMK Government on Paddy Procurement : விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை ஏன் உடனடியாக தமிழக அரசு கொள்முதல் செய்யவில்லை? என்று எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

Kannan

நிர்வாக திறன் இல்லாத அரசு

H Raja Questions DMK Government on Paddy Procurement : மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா, “ தமிழக அரசின் நிர்வாகத் திறமையின்மை, அலட்சியம் மற்றும் ஊழல் காரணமாக மாநிலத்தின் வளர்ச்சியும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வழங்கும் பேரிடர் மேலாண்மை நிதியைக் கூடத் தமிழக அரசால் முறையாகப் பயன்படுத்த முடியவில்லை. 'கடன் வாங்குவதில் மட்டுமே' தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

தோல்வியடைந்த திராவிட மாடல் அரசு

எல்லாவற்றிலும் தோல்வியடைந்த திராவிட மாடல் அரசு, மத்திய அரசு வழங்கிய ரூ. 4,000 கோடி பேரிடர் மேலாண்மை நிதியைச் சென்னையில் வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காகப் பெற்றது. ஆனால், அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என். நேரு, 95% நிதியைச் செலவழித்து விட்டதாகப் பொய் சொன்னார். மத்திய அரசு நெருக்கடி கொடுத்த பின்னரே, வெறும் 40% பணிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன என்பதை ஒப்புக்கொண்டனர்.

நெல் கொள்முதலில் பெரும் தோல்வி

வேளாண்மைத் துறை அமைச்சர் சாகுபடிப் பரப்பு அதிகரித்ததுதான் பிரச்சினைக்குக் காரணம் என்று தெரிவிக்கிறார். நெல் ஒரு நாளில் விளைந்து விடாது. விதை விதைக்கும்போதே பரப்பளவு அதிகரிப்பு குறித்துத் தெரிந்திருக்க வேண்டும். அறுவடை செய்ய 110 நாட்கள் ஆகும். அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அரசு என்ன செய்து கொண்டிருந்தது? அறுவடை செய்த நெல்லை ஏன் உடனடியாகக் கொள்முதல் செய்யவில்லை?

மக்கள் உங்களுக்கு பாடம் புகட்டுவர்

கொள்முதல் செய்த நெல்லைப் பாதுகாப்பதற்கு ஒரு நிரந்தரக் கிடங்கு கூட உங்களால் அமைக்க முடியவில்லை. இன்று அறுவடை செய்த நெல்லை வைக்க விவசாயிக்கு இடமில்லை. நீங்கள் கொள்முதல் செய்த நெல்லோ முளைத்துப் போய்விட்டது. நெல்லுக்கான தொகையை இந்திய உணவு கழகம் வழங்குகிறது. அந்த நெல்லைப் பாதுகாத்து வைப்பதுதானே உங்கள் வேலை? திமுகவுக்கு 2026 தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

கடன் வாங்குவதில் திமுக அரசு முதலிடம்

வருவாய் ஈட்டுவதில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. ஆனால், தமிழகம் கடன் வாங்குவதில்தான் முதலிடத்தில் உள்ளது. நடப்பு நிதியாண்டில் இந்த அரசு வாங்கத் திட்டமிட்டுள்ள கடன் தொகை ரூ. 97,000 கோடி. இதில் அரசின் மூலதனச் செலவு ரூ. 57,000 கோடி. எஞ்சிய ரூ. 40,000 கோடியை என்ன செய்யப் போகிறீர்கள்? அது யார் வீட்டுக்குச் செல்லப் போகிறது? இதற்குக் தெளிவான வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும்,

மேலும் படிக்க : திமுக அரசின் தோல்வியால் விவசாயிகள் கண்ணீர்! : அன்புமணி காட்டம்

மத்திய அரசு மீது பழிபோடுவதா?

நெல் கொள்முதலில் தாமதம் ஏற்படுவதற்கு மத்திய அரசுதான் காரணம் என்று வேளாண் துறை அமைச்சர் கூறுகிறார். மத்திய அரசு என்ன இவர்களது கையைப் பிடித்து இழுத்து வைத்திருக்கிறதா? கொள்முதல் செய்த நெல் மூட்டைகளைப் பாதுகாக்கப் போதிய வசதிகள் இவர்களிடம் இல்லை. அதை மறைப்பதற்குப் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்” இவ்வாறு எச். ராஜா பேட்டியளித்தார்.

==========