திமுக அரசின் தோல்வியால் விவசாயிகள் கண்ணீர்! : அன்புமணி காட்டம்

Anbumani Ramadoss Accused DMK Government : நெல் கொள்முதலில் தனது தோல்வியை மறைக்க மத்திய அரசு மீது திமுக அரசு பழி போடுவதாக அன்புமணி குற்றம்சாட்டி இருக்கிறார்.
Anbumani accused DMK government, blaming central government to hide its failure in paddy procuremen
Anbumani accused DMK government, blaming central government to hide its failure in paddy procuremen
2 min read

நெல் கொள்முதலில் முன்னேற்றம் இல்லை

Anbumani Ramadoss Accused DMK Government : இதுதொடர்பாக அவர் விடுத்திருக்கும் அறிக்கையில், ”காவிரி பாசன மாவட்டங்களில் அரும்பாடுபட்டு சாகுபடி செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்படாதது குறித்து உழவர்கள் கதறி அழுது முறையிட்டாலும் கூட, கொள்முதலில் இன்று வரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கொள்முதல் நிலையங்களுக்கு முன்பாக மழையில் நனைந்த நெல்லுடன் உழவர்கள் தவம் கிடைக்கும் அவல நிலை தான் இன்னும் நீடிக்கிறது.

திமுக அரசு படுதோல்வி

உழவர்களின் கண்ணீரைத் துடிக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது. காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த சில பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு, நடப்பாண்டில் கிட்டத்தட்ட ஆறரை லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டிருந்தது. வழக்கத்தை விட நடப்பாண்டில் விளைச்சலும் அதிகமாக கிடைக்கும் சூழல் நிலவிய நிலையில், அதைக் கருத்தில் கொண்டு மிகப்பெரிய அளவில் விற்பனைக்கு வரும் நெல்லை கொள்முதல் செய்ய தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அதை செய்வதில் தமிழக அரசு படுதோல்வி அடைந்து விட்டது.

14 லட்சம் டன் நெல் சாகுபடி

காவிரி பாசன மாவட்டங்களில் ஏக்கருக்கு சராசரியாக 2.5 டன் நெல் விளைச்சல் கிடைத்திருக்கிறது. அப்படியானால், 6.50 லட்சம் ஏக்கரில் சுமார் 14 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய வேண்டி இருக்கும்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை. மயிலாடுதுறை மாவட்டங்களில் 914 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒரு நாளைக்கு ஒரு கொள்முதல் நிலையத்தில் 1000 மூட்டைகள், அதாவது 40 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தால், செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் தீப ஒளி திருநாள் வரையிலான 50 நாள்களில் குறைந்தது 18 லட்சம் டன் நெல்லை கொள்முதல் செய்திருக்கலாம்.

பாதியளவு கூட கொள்முதல் செய்யப்படவில்லை

முதல் 20 நாள்களை கணக்கில் கொள்ளாமல் கடந்த ஒரு மாதத்தில் இந்த அளவுக்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தால் கூட சுமார் 11 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை 5.66 லட்சம் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சாத்தியமாகக் கூடிய அளவில் பாதியளவு கூட நெல் கொள்முதல் செய்யப்படாதது தான் உழவர்களின் துயரத்திற்கு காரணம் ஆகும்.

கடமை தவறிய திமுக அரசு

மொத்தம் 14 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மீதமுள்ள நெல்லை எங்கு சேமித்து வைக்கலாம் என்பதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அந்த அடிப்படைக் கடமையைக் கூட திமுக அரசு செய்யவில்லை.

மத்திய அரசு மீது பழிபோடுவதா?

செறிவூட்டப்பட்ட அரிசி கொள்முதலுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்காதது தான் அனைத்து சிக்கலுக்கும் காரணம் என்று பழி போட்டு தமிழக அரசு அதன் தோல்விகளில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியாது. நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு கொண்டு செல்ல போதிய எண்ணிக்கையில் சரக்குந்துகள் இல்லை. இவற்றை போதிய எண்ணிக்கையில் தயார்படுத்த திமுக அரசு தவறி விட்டது.

மேலும் படிக்க : மக்களை ஏமாற்றி பொய் முதலீடு செய்யாதீர்கள்- அன்புமணி ராமதாஸ்!

திமுக அரசால் விவசாயிகள் கண்ணீர்

அடுத்து வரும் நாள்களில் பெரிய அளவில் மழை பெய்தால் நெல்லுக்கு ஏற்படும் பாதிப்பும், உழவர்களுக்கு ஏற்படும் இழப்பும் மதிப்பிட முடியாதவையாக இருக்கும்” என எச்சரித்திருந்தேன். அப்போதே திமுக அரசு விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுத்திருந்தால் கூட, உழவர்களின் கண்ணீரை தடுத்திருக்க முடியும். ஆனால், அதன் பிறகும் எந்த முன்னேற்பாடுகளையும் செய்யாத திமுக அரசு தான் உழவர்களின் கண்ணீருக்கு பொறுப்பேற்க வேண்டும்.

நெல் கொள்முதலை விரைவுபடுத்துக

உழவர்கள் நலனில் தமிழக அரசுக்கு சிறிதளவாவது அக்கறை இருந்தால் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று” அந்த அறிக்கையில் அன்புமணி வலியுறுத்தி இருக்கிறார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in