நயினார் நாகேந்திரன் பயணம்
Nainar Nagendran on Coimbatore College Girl Rape Case : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வருகிற சட்டமன்ற தேர்தலை நோக்கி தமிழகம் முழுவதும், தமிழகம் தலைநிமிர தலை தமிழனின் பயணம் என்று தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அவ்வப்போது தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தும், எக்ஸ் பக்கத்தில் தனது கருத்துக்களையும், விமர்சனங்களை முன்வைத்து அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறார்.
கோவை பாலியல் வன்கொடுமை நிகழ்வு
கோவை விமான நிலையம் அருகே பிருந்தாவன் நகர் பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். ஆள் நடமாட்டமற்ற அப்பகுதிக்கு அப்போது வந்த 3 பேர் கொண்ட கும்பல் காரில் இருந்த கல்லூரி மாணவியின் ஆண் நண்பரை கடுமையாக தாக்கியுள்ளது.இதனால் அந்த ஆண் நண்பர் மயக்கமடைந்த நிலையில், 3 பேர் கொண்ட கும்பல் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.
தப்பியோடிய 3 பேர் கொண்ட கும்பல்
பின்னர் மயக்கம் தெளிந்த அந்த ஆண் நண்பர், காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அப்பகுதியை சோதனை செய்தபோது, முற்புதர் அருகில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கவலைக்கிடமான நிலையில் இருந்த அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், வழக்கு பதிவு செய்யப்பட்டு தப்பியோடிய 3 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். இந்நிலையில், கோவையில் நடந்தேறிய இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
நயினார் நாகேந்திரன் எக்ஸ் பதிவு
இந்நிலையில், இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நேற்றிரவு கோவை விமான நிலையத்தின் பின்புறம் தனியார் கல்லூரி மாணவி ஒருவர் மர்ம கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவி முழு உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் நமது பெண்கள் தலைகாட்டவே அஞ்சுகின்றனர்
மேலும், கடந்த நான்கரை ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் ஒருவித பதற்றத்துடனேயே நமது பொழுது விடிகிறது, எந்த ஊரில் எந்தப் பெண்ணின் வாழ்வு சூறையாடப்பட்டதோ என்ற பயத்துடனேயே செய்தித்தாள்களை நாம் புரட்ட வேண்டியிருக்கிறது, வீட்டில் இருந்தாலும் சரி வெளியில் போனாலும் சரி பெண்கள் வேட்டையாடப்படுகிறார்கள், “தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டேன்” என வெட்டி வசனம் பேசும் திமுக ஆட்சியில் நமது வீட்டுப் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுகின்றனர், இந்த அவலங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களோ கவலையின்றி கம்பு சுற்றிக் கொண்டிருக்கிறார். இதுதான் நாடு போற்றும் நல்லாட்சியின் லட்சணமா? என்று விமர்சித்துள்ளார்.