காவலர் குடியிருப்பில் படுகொலை
Nainar Nagendran on Tamil Nadu Police : இதுபற்றி அவர் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் தள பதிவில், “திருச்சி பீமாநகரில் உள்ள காவலர் குடியிருப்பிற்குள்ளேயே ஒருவர் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிப்பதோடு, திமுக ஆட்சியில் எங்கு சென்றாலும் பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லை என்ற உண்மையை நெற்றியில் அடித்தாற்போல நமக்கு மீண்டுமொருமுறை உணர்த்தி இருக்கிறது.
நான்கரை ஆண்டுகளாக குற்றங்கள் அதிகரிப்பு
கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்கள் எல்லாம் சர்வ சாதாரணமாகி விட்டது. பட்டப்பகலில் காவல்நிலையங்களின் அருகிலும் நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயும் ஒருவரை வெட்டிச் சாய்ப்பது பேஷனாகி விட்டது.
காவல்துறை கைகள் கட்டப்பட்டுள்ளன
காவல்துறையினரின் கைகள் கருப்பு-சிவப்பு கயிற்றால் கட்டப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொண்ட குற்றவாளிகளுக்கு சுத்தமாகக் குளிர்விட்டுப் போய்விட்டது. காவல்துறை மீதான மக்களின் நம்பிக்கை இத்துப் போய்விட்டது. இது நமது சமூக அழிவிற்கான அறிகுறியாகும்.
முழுநேர டிஜிபி - தயக்கம் என்ன?
தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு இப்படி சீரழிந்து கிடக்கையில் முழுநேர காவல்துறை தலைமை இயக்குனரை இன்னும் நியமிக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கும் ஆளும் அரசின் ஆணவம் சகித்துக் கொள்ள முடியாதது.
பல்லாங்குழி ஆடும் திமுக
பொதுமக்களின் உயிர்களை வைத்து இப்படி பல்லாங்குழி ஆடிக்கொண்டிருக்கும் இந்த திமுக அரசு, முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய கள்ளிச்செடி” என்று அந்தப் பதிவில் நயினார் நாகேந்திரன் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.
தலைவர்கள் கண்டனம்
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோரும் திருச்சி படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு,ஆளும் திமுக அரசை சாடி இருக்கிறார்கள்.
=====