Chief Minister Vijay Honors Police Constable Velmurugan for Bravery source:thamizhalai,cmotamilnadu
தமிழ்நாடு

காரில் தொங்கியபடி 40 கி.மீ பயணம் செய்த காவலர் வேல்முருகன்: நேரில் அழைத்து பரிசளித்துப் பாராட்டிய முதல்வர் விஜய்!

கோவையில் காரின் மேல் 40 கி.மீ பயணித்து குட்கா கடத்தலைத் தடுத்த தலைமை காவலர் வேல்முருகனை முதல்வர் விஜய் நேரில் அழைத்துப் பாராட்டி பரிசு வழங்கினார்.

Kavitha prasanna

Chief Minister Vijay Honors Police Constable Velmurugan for Bravery

உயிரைப் பணயம் வைத்து சாகசப் பயணம்

கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் கடந்த 27-ம் தேதி காலை காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநில பதிவெண் கொண்ட சொகுசு காரை சோதனையிட்டபோது, காரில் இருந்த 3 பேர் திடீரென காரை அதிவேகமாக இயக்கினர்.

அப்போது சுதாரித்துக் கொண்ட தலைமை காவலர் வேல்முருகன் (38) சட்டென்று காரின் மேற்கூரையின் மீது தாவி ஏறி படுத்துக்கொண்டார்.

40 கி.மீ தூரம் அதிவேகப் பயணம்

விளாங்குறிச்சியிலிருந்து கணியூர் சுங்கச்சாவடி வழியாக அவிநாசி வரை சுமார் 40 கி.மீ தூரத்திற்கு அசுர வேகத்தில் சென்ற காரின் மேல் பகுதியைப் பிடித்துக்கொண்டே தனது உயிரைப் பணயம் வைத்து வேல்முருகன் பயணித்தார்.

இதையறிந்த அவிநாசி காவல்துறையினர் தேசிய நெடுஞ்சாலையில் செயற்கையாக போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி, காரை சுற்றிவளைத்து மடக்கிப் பிடித்தனர்.

3 பேர் கைது - புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

காரில் வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ் (20), ராஜேஷ் (23), பாபாதரம் (27) ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட 233 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் பாராட்டு

உயிரைப் பணயம் வைத்து குட்கா கடத்தலைத் தடுத்த தலைமை காவலர் வேல்முருகனை, முதல்வர் விஜய் தலைமைச் செயலகத்துக்கு நேரில் அழைத்து சால்வை அணிவித்து, பரிசு வழங்கிப் பாராட்டினார்.

மேலும், பணியின் போது கவனமாகவும் பாதுகாப்பாகவும் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார். இந்நிகழ்வின் போது தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) மகேஷ் குமார் அகர்வால் உடன் இருந்தார்.

இதையும் படிங்க: காரில் தொங்கியபடி 40 கி.மீ பயணம் : குட்கா கடத்தல் கும்பலைத் துணிச்சலாகப் பிடித்த தலைமை காவலர் வேல்முருகன்!

======