நிறைவுபெற்ற குறுவை அறுவடை
Paddy Procurement in Tamil Nadu : தமிழகத்தில் குறுவை அறுவடை கிட்டத்தட்ட முடிந்த நிலையில், காவிரி டெல்டா முழுவதும் விவசாயிகள் நெல் கொள்முதலில் கடுமையான தாமதங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் (TNCSC) போதுமான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பை உறுதி செய்யத் தவறிவிட்டதால், ஆயிரக்கணக்கான டன் அறுவடை செய்யப்பட்ட நெல் உரிய முறையில் சேமிக்கப்படாமல், மழையில் வீணாகி இருக்கிறது.
6.31 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி
இந்த ஆண்டு குறுவை சாகுபடி 6.31 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டது, இது வழக்கமான 3.87 லட்சம் ஏக்கரை விட மிக அதிகம். சாகுபடி அதிகரித்தாலும், கொள்முதல் எதிர்பார்ப்புகளை விட மிகவும் பின்தங்கி இருப்பது வேதனைக்குரிய விஷயம். ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட 70% பயிர்களில், 40% மட்டுமே தமிழக அரசு கொள்முதல் செய்து இருக்கிறது.
செயல்படாத தற்காலிக கொள்முதல் மையங்கள்
மாவட்ட கொள்முதல் மையங்கள் ஒவ்வொன்றும் 10,000 முதல் 20,000 பை (40 கிலோ பைகள்) நெல்லை இருப்பு வைத்திருக்கின்றன. தற்காலிகமாக அமைக்கப்பட்ட கொள்முதல் மையங்கள் முழுமையாக செயல்பாட்டிற்கு வரவில்லை. இதன் காரணமாக நெல் திறந்த வெளிகளில் சேமிக்கப்பட்டு, மழையால் சேதத்திற்கு ஆளாகிறது. அரசின் இந்த மெத்தனம், விவசாயிகளுக்கு கடுமையான துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் ஏற்படும் இழப்புக்கு யார் பொறுப்பேர்கள் எனத் தெரியாமல் அவர்கள் பரிதவிக்கின்றனர்.
600 பைகள் வரை மட்டுமே கொள்முதல்
குறைந்த அளவே லாரிகள் கிடைப்பதால், கொள்முதல் கிடங்குகளுக்கு நெல் மூட்டைகளை அனுப்புவதில் தாமதம் ஏற்படுகிறது. ஒவ்வொரு மையமும் ஒரு நாளைக்கு 500 முதல் 600 பைகளை மட்டுமே கொள்முதல் செய்கின்றன. 1,000 பைகள் என்ற இலக்கு இருந்தாலும் அதை எட்டுவதில்லை என்பதை உண்மை.
சாக்குப் பைகள் பற்றாக்குறை
மேற்கு வங்கத்தில் இருந்து புதிய சாக்குப் சப்ளைகள் போதிய அளவில் இருப்பதாக அரசு கூறினாலும், பெரும்பாலான கொள்முதல் கிடங்குகளில் சாக்குப் பைகள் பற்றாக்குறையாகவே இருக்கிறது. இதனால் சீரான கொள்முதல் நடைபெறுவதே இல்லை. எதிர்பார்க்கப்படும் மகசூல், போக்குவரத்தை தேவை போன்றவை தொடர்பாக விவசாயிகளுடன் அரசு அதிகாரிகள் ஆலோசனை ஏதும் நடத்தி, அதற்கான தீர்வினை காண முயற்சிக்கவே இல்லை.
நிர்வாக முடிவுகளில் பெரும் குளறுபடி
2025 ஜனவரி மற்றும் அக்டோபர் மாதம் வரையிலான காலத்தில் தமிழ்நாடு வேளாண் அறிவியல் கழகத்தில் ஐந்து நிர்வாக இயக்குநர்கள் மாற்றப்பட்டதால் ஒருங்கிணைப்பு மற்றும் முடிவெடுப்பது சீர்குலைந்து விட்டது. காவிரி டெல்டா முழுவதும் தொடர்ந்து பெய்த மழையால் நெல் இருப்புக்கள் வெளிப்பட்டு, நீண்ட ஈரப்பதம் காரணமாக பல மையங்களில் அவை முளைத்துள்ளன.
திமுக அரசின் கீழ் நெல் கொள்முதலில் தாமதங்கள் மற்றும் தவறான மேலாண்மை ஆகியவை தொடர்ச்சியான பிரச்சினையாக இருந்து வருகிறது என்று விவசாயிகள் குற்றம்சாட்டுகிறார்கள். ஒவ்வொரு பருவத்திலும், மோசமான திட்டமிடல் மற்றும் மேற்பார்வை காரணமாக, மையங்களில் நெல் கொள்முதல் செய்யப்படாமல் தேங்குகிறது அல்லது சேதமடைகிறது.
தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை
ஒவ்வொரு பஞ்சாயத்து ஒன்றியத்திலும் தானிய கிடங்குகளை நிறுவுவததாக அளித்த தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவே இல்லை. இதன்காரணமாக விவசாயிகள் தொடர்ந்து இழப்புகளையும் துயரங்களையும் சந்திக்கின்றனர், இதற்கு நிரந்தர தீர்வு இல்லை என்பது கசப்பான உண்மைதான்.
மேலும் படிக்க : TN Rain : தீவிரம் அடைந்த பருவமழை : வேகமாக நிரம்பும் அணைகள், ஏரிகள்
விவசாயிகளின் கவலை, அரசின் தோல்வி
வயல்களில் பல மாதங்கள் கடுமையாக உழைத்து, நெல்லை அறுவடை செய்தாலும், கொள்முதல் கிடங்குகளில் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய அவலம் தான் விவசாயிகளுக்கு உள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதால் மேலும் சேதம் ஏற்படுவதைத் தடுக்க கொள்முதலை விரைவுபடுத்த வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கை. பருவமழை, பண்டிகை காலம் போன்றவற்றை கருத்தில் கொண்டு கொள்முதலை திட்டமிடுவது அரசின் கடமை. ஆனால், திட்டமிட்டு சரியான நேரத்தில் செயல்படாமல் இருப்பது. அறுவடை செய்யப்பட்ட நெல்லை விரைவாக கொள்முதல் செய்யாமல் மழையில் நனைய விடுவது போன்ற செயல்கள், திமுகவின் அலட்சியம் மற்றும் திறமையின்மையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
=============