
வடகிழக்கு பருவமழை :
TN Rain Update : தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை விடைபெற்று, வடகிழக்கு பருவமழை கடந்த 16ம் தேதி தொடங்கியது. அன்று முதல் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறா விட்டாலும், கரையை நோக்கி நகர்வதால், வட தமிழகத்தில் மழை கொட்டித் தீர்த்தது.
நிரம்பும் ஏரிகள், அணைகள்
இதனால் அணைகள், ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கெனவே நிரம்பியுள்ள நீர்நிலைகளுக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. உபரிநீர் வெளியேறும் நீர்நிலைகளை உன்னிப்பாக அதிகாரிள் கண்காணித்து வருகிறார்கள்.
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி மண்டலங்களில் உள்ள 90 அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் மொத்த கொள்ளளவு 224 டிஎம்சி (2.24 லட்சம் மில்லியன் கன அடி) ஆகும். தற்போதைய நிலவரப்படி 196 டிஎம்சி (87.77 சதவீதம்) நீர் இருப்பு உள்ளது.
மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் மொத்தம் 14,141 ஏரிகள் உள்ளன. இவற்றில் 1,522 ஏரிகள் முழுவதுமாக நிரம்பியுள்ளன. அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 390 குளங்கள் நிரம்பி விட்டன. 77 முதல் 99 சதவீதம் வரை 1,832 ஏரிகளும், 51 முதல் 75 சதவீதம் வரை 1,842 ஏரிகளும் நிரம்பியுள்ளன. அதேசமயம், 620 குளங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன.
75% நிரம்பிய சென்னை குடிநீர் ஏரிகள்
சென்னை மாநகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய்க்கண்டிகை, வீராணம் ஆகிய ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13,222 மில்லியன் கன அடி. நேற்றைய நிலவரப்படி நீர் இருப்பு 9,986 மில்லியன் கன அடியாக (75.53 சதவீதம்) உள்ளது. இதே தேதியில் கடந்த ஆண்டு நீர் இருப்பு 6,105 மில்லியன் கன அடியாக இருந்தது.
மேலும் படிக்க : தீவிரம் பெறும் தாழ்வுப்பகுதி : 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
நீர்வரத்து கண்காணிப்பு, வெளியேற்றம்
செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகியவற்றில் முன்கூட்டியே வெள்ள நீர் திறக்கப்பட்டு போதுமான இடைவெளி பராமரிக்கப்பட்டு வரு வதால், மிக கன மழை பெய்தாலும், வெள்ள நீர் திறப்பின் அளவு மட்டுப்படுத்தப்பட்டு அடையாறு மற்றும் கொசஸ்தலை ஆற்றில் பாதுகாப்பாக கடலைச் சென்றடையும். மழை தீவிரம் அடைந்தால், நிலைமையை சமாளிக்கும் வகையில் தண்ணீர் திறப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
===============