Election Commission Reply To Madras HC on TVK Party Recognition Case About Karur Stampede Death Latest News in Tamil 
தமிழ்நாடு

"தவெக" அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல : உயர் நீதிமன்றத்தில் EC பதில்

Election Commission Reply To Madras HC on TVK Party Recognition : தமிழக வெற்றிக் கழகம் அங்கீகரிக்கப்பட்ட கட்சி கிடையாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Kannan

கரூர் கூட்ட நெரிசல் - 41 பேர் பலி

Election Commission Reply To Madras HC on TVK Party Recognition : கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் பரிதாபமாக பலியாயினர். இதுபற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.

இது தொடர்பான வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், முழுமையாக விசாரிக்க அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு விசாரணை அமைத்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தவெக உச்சநீதிமன்றத்தை நாடியது.

உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அதனை கண்காணிக்க ஒரு குழுவையும் அமைத்தது. மேலும் சிறப்பு புலனாய்வு விசாரணை மற்றும் தமிழக அரசின் ஒரு நபர் ஆணைய விசாரணைக்கும் உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

கரூர் வந்துள்ள சிபிஐ குழுவினர் சிறப்பு புலனாய்வு குழுவிடம் இருந்து ஆவணங்களை பெற்றுக் கொண்டு, விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள்.

தவெக அங்கீகாரம் - உயர் நீதிமன்றத்தில் வழக்கு

இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் என்பவர் கரூர் சம்பவத்துக்கு காரணமான தவெகவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

தவெக கூட்டத்தில் பெண்கள், குழந்தைகள்

அவர் தனது மனுவில், ''அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு பெண்கள், குழந்தைகள் என கூட்டம் கூட்டுவது தேர்தல் ஆணைய விதிகளுக்கு எதிரானது. கரூர் தவெக கூட்டத்தில் பெண்கள், குழந்தைகள் பங்கேற்று உயிரிழந்தனர்.

சட்ட விதிகளை மீறிய தவெக

சட்ட விதிகளை மீறும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்துக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் அதிகாரம் வழங்கியுள்ளது. எனவே, தவெகவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார். அரசியல் கட்சிகளின் கூட்டங்களில் பெண்கள், குழந்தைகள் பங்கேற்காதபடி நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் படிக்க : கரூரில் விசாரணையை தொடங்கிய CBI: ஆவணங்களை ஒப்படைத்த SIT

தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல‌

இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், ''தவெக அங்கீகரிக்கப்பட்ட அட்சி அல்ல; ஆகவே அந்த கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யும்படி கோரிக்கை வைக்க முடியாது'' என்று தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கும், டிஜிபிக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

=====