Former MDMK Executive Nanjil Sampath Speech About MDMK Party Future 
தமிழ்நாடு

மதிமுகவை இனி மீட்கவே முடியாது: அடித்து சொல்கிறார் நாஞ்சில் சம்பத்

Nanjil Sampath Speech About MDMK : குடும்ப கட்சியாகி விட்ட மதிமுகவை இனி மீட்கவே முடியாது என்று, அக்கட்சியின் முன்னாள் நிர்வாகியான நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

Kannan

குடும்ப அரசியலில் சிக்கிய மதிமுக :

Nanjil Sampath Speech About MDMK : மதிமுகவில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா இடையேயான மோதல். குடும்ப அரசியலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து இருக்கிறது. வைகோ மகன் துரை வைகோவை கட்சிக்குள் கொண்டு மல்லை சத்யா உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதையும், மீறி மக்களவை எம்பியாக்கி அழகு பார்த்தார் வைகோ. இப்போது, மல்லை சத்யா கட்சிக்கு துரோகம் இழைக்கிறார் என்ற குற்றச்சாட்டை வைகோ முன்வைத்து மதிமுகவில் பிளவை உறுதிபடுத்தி இருக்கிறார்.

மதிமுகவின் எதிர்காலம், கேள்விக்குறி :

மதிமுகவில் நடப்பது என்ன? அக்கட்சியின் எதிர்காலம் என்ன ஆகும், என்ற கேள்விகளுக்கு பதிலளித்துள்ள அக்கட்சியின் முன்னாள் நிர்வாகியான நாஞ்சில் சம்பத்(Nanjil Sampath), ” வைகோ, துரை வைகோ தவிர, மதிமுகவில் உள்ள அனைவரும், என்னோடு தொடர்பில் இருக்கிறார்கள். பாஜகவிடம் மதிமுக விலை போய் விட்டது. துரை வைகோவை அதிகாரப் பசி ஆட்டி படைக்கிறது.

மகனுக்காக கட்சியை பலியிட்டார் வைகோ :

துரைக்கும், மதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனால், புத்திரனை வைத்துக் கொண்டு, அவரது எதிர்காலத்திற்காக மொத்த கட்சியையும் குடும்பக் கட்சியாக்கி இருக்கிறார் வைகோ. மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. கட்சிக்காக காலம் காலமாக உழைத்தவர்கள் போட்டியிட தயாராக இருந்தபோது, மகனுக்கு திருச்சி தொகுதியை பரிசாக கொடுத்தார் வைகோ.

நிர்வாகிகளை விட மகனுக்கு முன்னுரிமை :

கட்சிக்கு உழைத்தவர்களை விட, மகன் தான் முக்கியம் என முடிவெடுத்து, தொகுதியை ஒதுக்கினார். விளைவு, கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, மதிமுக தேய்ந்து விட்டது. வைகோவின் சுய நல செயல்பாடுகளால், மதிமுகவை விட்டு எல்லோரும் வெளியேறுகிறார்கள். 'நெருப்பில் கூட படுக்கலாம். வைகோவுடன் யாரும் இருக்க முடியாது' எனக் கட்சியினர் முடிவெடுத்து விட்டனர்.

மதிமுகவினரை மினி பஸ்களில் ஏற்றி விடலாம் :

தற்போது மதிமுகவில் இருப்போரை, மொத்தமாக இரண்டு மினி பஸ்களில் ஏற்றி விடலாம். இனி கட்சி தேறுவது கடினம். மதிமுக அஸ்தமமாகி விட்டது. அக்கட்சிக்கு முடிவு நெருங்கி விட்டது. வைகோ தன் மகனுக்காக, கட்சியையே தாரை வார்த்து விட்டார். திருச்சியில் வெற்றி பெற்ற ரங்கராஜன் குமாரமங்கலம், தலித் எழில்மலை ஆகியோர் மத்திய அமைச்சராகினர்.

மேலும் படிக்க : ”பழிச்சொல்லுக்கு ஆளாகி நிற்கிறேன்” : புலம்பித் தள்ளும் வைகோ

துரை வைகோவுக்கு அமைச்சர் ஆசை :

அந்த சென்டிமென்ட்படி, தானும் மத்திய அமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை, துரைக்கு வந்து விட்டது. அதற்கான முயற்சிகளில் தந்தையும் மகனும் களம் இறங்கி விட்டனர். மதிமுகவை இனி யாராலும் மீட்க முடியாது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில், மதிமுகவிற்கான கூட்டணி பேரம் முடிந்து விட்டது. ஹிட்லர், சுவஸ்திக் பட்டையை, தன் கையில் கட்டியிருப்பார். துரையும் ஒரு ஹிட்லர் தான். அவரும், கட்சிக் கொடியை கைப்பட்டையாக கட்டியுள்ளார். கோவணத்தை இடுப்பில் தான் கட்ட வேண்டும். ஆனால், துரை சட்டையில் கட்டியுள்ளார்.

வைகோவிற்கு 10,000 கோடி சொத்து? :

வைகோவுக்கு 10 ஆயிரம் கோடி(Vaiko Net Worth) ரூபாய் சொத்து இருக்கிறது என சொல்கின்றனர். பூமிநாதன் எம்எல்ஏ திமுகவிற்கு சென்று விடுவார். மதிமுகவுக்கு வைகோ முடிவுரை எழுதிக் கொண்டிருக்கிறார். வைகோவின் தவறான செயல்பாடுகளால், எஞ்சிருக்கும் மதிமுகவினரும் தாய்க்கழகமான திமுகவிற்கு சென்று விடுவார்கள்” இவ்வாறு நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

====