வடகிழக்கு பருவமழை தீவிரம்
Low Pressure in Bay of Bengal : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், பரவலாக மழை பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் பெய்து வரும் மழையால், நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. சென்னையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஏற்கனவே வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்து விட்டது.
வங்கக் கடலில் தாழ்வுப்பகுதி
இந்நிலையில், தென்கிழக்கு வங்ககடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று காலை தென்கிழக்கு வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடையும் என்று, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயலாக மாற வாய்ப்பு? - எங்கு கடக்கும்?
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது(Montha Cyclone Alert). அதன்படி, புயல் சின்னமாக வலுப்பெற்றால் தமிழகம் அல்லது ஆந்திராவை நோக்கி நகர்வதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கிறது.
வேகமாக வலுவடையும் தாழ்வுப்பகுதி
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்து, டெல்டா வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் கணிக்கையில், ” தமிழகம், ஆந்திராவை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆழ்கடலில் இந்த தாழ்வுப்பகுதி உருவாகி இருப்பதால் அடுத்தடுத்த நிலைகளை வேகமாக அடைய வாய்ப்பு உள்ளது அந்தவகையில் 26ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். தொடர்ந்து இது புயலாகவும் மாற வாய்ப்புகள் அதிகம். ஆந்திராவை நோக்கி சென்றால், தமிழகத்தில் அதிக பாதிப்பு இருக்காது. சென்னை அருகே கடந்து, ஆந்திராவை நோக்கி சென்றால், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க : TN Rain : தீவிரம் அடைந்த பருவமழை : வேகமாக நிரம்பும் அணைகள், ஏரிகள்
பலத்த மழை - வானிலை மையம்
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின் படி, 26ம் தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும், 27ம் தேதி ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், 28-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை(Chennai Rain) பெய்யக்கூடும் என கணித்துள்ளது.
================