Karur Tragedy Death in TVK Vijay Campaign Rally 
தமிழ்நாடு

Karur Tragedy : நாட்டையே உலுக்கிய துயரம்: நடந்தது என்ன?

Karur Tragedy Death in TVK Vijay Campaign : இந்தியாவையே வேதனைக்குள்ளாக்கி இருக்கும், கரூர் துயரச் சம்பவம், நடந்தது எப்படி? என்ன நடந்தது? என்பதை விரிவாக பார்க்கலாம்.

Kannan

கரூரில் விஜய் - திரண்டிருந்த கூட்டம் :

Karur Tragedy Death in TVK Vijay Campaign : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று நாமக்கல், கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் நேற்று நண்பகல் 12 மணியளவில், விஜய் பரப்புரை செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, காலை 10 மணி முதலே தொண்டர்கள் அப்பகுதியில் திரளத் தொடங்கினார்கள். ஆனால் நாமக்கல் கூட்டத்தில் விஜய் பேசி முடிக்க மூன்று மணியை தாண்டி விட்டது.

தண்ணீர், உணவின்றி காத்திருப்பு :

இதனால், அவரது கரூர் வருகை தாமதமாகிக் கொண்டே வந்தது. ஆனால்,தொண்டர்கள் கூட்டம் மட்டும் குறைந்தபாடில்லை. தண்ணீர், உணவு இன்றி தவித்தாலும். விஜய்யை பார்க்காமல் செல்வதில்லை என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர். விஜய் மூன்று மணிக்குதான் பேசினார் என்பதால் கரூர் பரப்புரை(Karur Vijay Manadu) தாமதமாகிக் கொண்டிருந்தது. அதனால் தொண்டர்கள் வருகையும் அதிகரித்த வண்ணம் இருந்தது.

கட்டுங்கடங்கா கூட்டம் - நிற்கவே இடமில்லை :

ஒரு கட்டத்தில் கட்டக் கடங்காத கூட்டத்தால் நிற்கக் கூட இடமில்லாத சூழல் ஏற்பட்டது. கட்டடங்கள், மரங்கள் என ஆபத்தான வகையில் தொண்டர்கள் ஏறி நின்றனர். அதனால் பாதுகாப்பு கருதி 6 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கூட்டத்தில் ஊர்ந்தபடி சென்ற விஜயின் பரப்புரை வாகனம் இரவு 7 மணிக்கு வேலுச்சாமி புரத்திற்கு வந்தது. விஜய்யின் வாகனத்திற்கு முன்னால் 6 வாகனங்களும், விஜய் வாகனத்தைத் தொடர்ந்து 15க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளின் வாகனங்களும் உள்ளே நுழைந்தபோதே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கூட்ட நெரிசல்(Karur Stampede) ஏற்பட போகிறது என்ற அச்சம் எழுந்தது.

தாகத்தால் தவித்த பொதுமக்கள் :

வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே விஜய் உரையாற்றினார். அலைமோதிய கூட்டத்தில் ஒருசிலர் மயக்கம் அடைய, அவர்கள் ஆம்புலன்சுகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். விஜய்யை முண்டியடுத்துக் கொண்டு பார்க்க கூட்டம் முன்னேறி வர, நெரிசல் ஏற்பட்டு, மக்கள் மூச்சுத் திணறினர்.

பல மணி நேரம் காத்திருந்தவர்கள் தண்ணீர், தண்ணீர் என கூக்குரலிட்டனர். இது விஜயின் கவனத்தை ஈர்க்க பாட்டில்கள், காலணிகள் உள்ளிட்டவற்றை விஜய்யின் வாகனத்தை நோக்கி எறிந்தனர்.

ஒரு பக்கம் விஜய் பேசிக் கொண்டே இருக்க, இன்னொரு பக்கம் பலர் மயக்கம் அடைந்தனர். கூட்ட நெரிசல் தள்ளுமுள்ளாக மாற, அடுத்தடுத்து பொதுமக்கள் கீழே விழுந்தனர்.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து உயிரிழக்க, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அரசு களத்தில் இறங்கியது. இதற்குள் நிலைமை கைமீறி போனதால், 39 உயிர்கள் பலியாகின. படுகாயம் அடைந்தோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் படிக்க : Karur : கரூரில் நடந்த துயரம்..! உண்மையில் பலி எண்ணிக்கை எத்தனை?

ஈடுகட்ட முடியாத சோகம் :

தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே எதிர்பார்க்காத வகையில் இந்தச் துயரச் சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது. ஒரு அரசியல் கட்சி கூட்டத்தில் 39 பேர் பலியாவாது நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு சம்பவம். எத்தனை இழப்பீடுகள் கொடுத்தாலும், எவ்வளவு பேர் ஆறுதல் கூறினாலும், சொந்தங்களை இழந்த மக்களின் இழப்பை ஈடு கட்டவே முடியாது.

===============

.