Madurai High Court Notice To Vijay on Karur Stampede Death : கரூரில் நடிகர் விஜய் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்டத்தில், ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் அதிகமானோர் காயமுற்றனர். இந்தச் சம்பவம் பற்றி, ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
பொதுநல மனுக்கள் தாக்கல் :
கரூர் சம்பவம்(Karur Incident) எதிரொலியாக அரசியல் கட்சிகளின் பேரணி, கூட்டம், மாநாடுகளில் கூடும் கூட்டத்தை முறைப்படுத்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும், தவெகவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும், கரூரில் இறந்தோரின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளுடன் 7 பேர் பொதுநல மனுக்கள் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்டன.
ஜாமின் கோரியும் மனுக்கள் தாக்கல்
தவெக பொதுச் செயலாளர் ஆனந்த்(Bussy N Anand), துணைப் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிந்துள்ளனர். இந்த வழக்குகளில் முன்ஜாமீன் கோரி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோரும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்து இருந்தனர்.
பொதுநல மனுக்கள் தள்ளுபடி
பொது நல மனுக்கள் நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன. கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த மரணங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தர விடவும், கூடுதல் இழப்பீடு வழங்க கோரியும் தாக்கலான மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
நீதிமன்றத்தை அரசியலாக்க கூடாது
நீதிமன்றத்தை அரசியல் ஆக்காதீர்கள், கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நினைத்து பாருங்கள் என்று காட்டமுடன் கூறிய நீதிபதிகள், அரசுத் தரப்பும், தமிழக வெற்றிக் கழகத்தின் தரப்பும் முன்வைத்த வாதங்களை பரிசீலித்தனர். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் பொதுக் கூட்டம் நடத்த தடை விதித்து நீதிபதிகள் உத்தர விட்டனர்.
மேலும் படிக்க : கரூர் சம்பவத்திற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
விஜய், அரசுக்கு நோட்டீஸ் :
கரூர் கூட்ட நெரிசலில் பலியானோருக்கு இழப்பீட்டை அதிகரித்து வழங்கக் கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், தமிழக அரசும், விஜய் தரப்பும் 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தனர்.
====