Madurai High Court Judges Will Conduct Personal Inspection in Karur Vennaimalai Murugan Temple Land Encroachment Case Madurai High Court Bench
தமிழ்நாடு

கோவில் சொத்து ஆக்கிரமிப்பு, நேரில் ஆய்வு! : நீதிபதிகள் அதிரடி

Karur Vennaimalai Murugan Temple Case : கோவில் நில ஆக்கிரமிப்பு வழக்கில் தேவைப்பட்டால் நேரில் ஆய்வு செய்வோம் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிரடியாக கூறியுள்ளனர்.

Kannan

கோவில் நில ஆக்கிரமிப்பு வழக்கு

Karur Vennaimalai Murugan Temple Case : தமிழகத்தில் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பான பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரிக்கப்பட்டு வருகின்றன. கரூர் மாவட்டம் வெண்ணெய்மலையில் உள்ள பாலசுப்பிரமணியசுவாமி கோவில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக, சென்னையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் பி.வேல்முருகன், பி.புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அதிகாரிகள் நேரில் ஆஜர்

அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், கரூர் ஆட்சியர் தங்கவேல், எஸ்.பி., ஜோஸ் தங்கையா, கோவில் செயல் அலுவலர் சுகுணா ஆஜராகினர். வருவாய்த்துறை ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா.கதிரவன், 'காலியாக இருந்த நிலம் மீட்கப்பட்டுள்ளது. வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள் உள்ள நிலம் தொடர்பாக சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தனி நபர் பெயர்களில் வழங்கிய பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன' என்றார்.

மனுதாரர் ஆய்வு செய்ய அனுமதி

'ஆவணங்கள் அடிப்படையில் மனுதாரர் கள ஆய்வு செய்யலாம். அதிகாரிகள் உள்ளிட்ட வேறு யாரும் ஆக்கிரமித்துள்ளனரா, பினாமி பெயரில் அச்சொ த்து உள்ளதா என ஆய்வு செய்யலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். மனுதாரருக்கு ஒட்டுமொத்த அரசுத்துறையும் ஒத்துழைக்க வேண்டும். அச்சுறுத்தல் வந்தால் எஸ்.பி.,யிடம் புகார் அளிக்கலாம்.

அரசுக்கு நீதிபதிகள் இறுதி வாய்ப்பு

நீதிமன்றத்தின் முழு நோக்கமும் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை அதன் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதே. அதற்காக அரசுக்கு இறுதி வாய்ப்பு வழங்குகிறோம் என்று தெரிவித்தனர்.

நேரில் ஆய்வு - நீதிபதிகள் எச்சரிக்கை

யார் உண்மையை மாற்றி கூறினாலும், நிலத்தை மீட்க சட்டப்படி நடவடிக்கை எடுக்க தவறினாலும், சரிபார்க்க நாங்களே நேரடியாக கள ஆய்விற்கு வருவோம். யாரையும் காப்பாற்ற முயற்சிக்கக் கூடாது. முயற்சித்தால் நீதிமன்றம் தகுந்த உத்தரவு பிறப்பிக்கும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.

இவ்விவகாரம் தொடர்பாக நிலுவையிலுள்ள ரிட் மற்றும் ரிட் மேல் முறையீட்டு மனுக்களை இவ்வழக்குடன் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட வேண்டும். வரும் காலங்களில் இவ்வழக்கில் அறநிலையத்துறை கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆஜராவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், விசாரணை நவம்பர் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

======