'Namma Iyakkam' to contest the upcoming general election: Annamalai makes a bold move by announcing a new political path
"நம்ம இயக்கம்" (We the Leaders)
பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகிய அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, தமிழ்நாட்டில் இன்று முதல் "நம்ம இயக்கம்" (We the Leaders) என்ற புதிய தளத்தைத் தொடங்கி, தனது புதிய அரசியல் பாதையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த இயக்கத்தின் மூலம் உறுப்பினர் சேர்க்கையையும் அவர் தீவிரமாகத் தொடங்கியுள்ளார்.
"மரியாதையோடு வெளியேறியுள்ளேன்" – நேரலையில் உருக்கம்!
தனது சமூக வலைதளப் பக்கத்தில் நேரலையில் பேசிய அண்ணாமலை, தனது புதிய இயக்கம் குறித்தும் அரசியல் நகர்வுகள் குறித்தும் பல்வேறு முக்கிய விபரங்களை தெரிவித்துள்ளார்.
ஒரு புதிய பாதை, புதிய இயக்கம்
பாஜகவில் இணைந்து தமிழ்நாடு மக்களுக்காக 6 ஆண்டுகள் பணியாற்ற எனக்கு நல்வாய்ப்பு கிடைத்தது. எந்த இடத்தில் நான் இணைந்தேனோ, அதே இடத்தில் மிக மரியாதையோடு சொல்லிவிட்டு, ஒரு தமிழரின் பண்போடு வெளியேறியுள்ளேன். இப்போது ஒரு புதிய பாதை, புதிய இயக்கத்தைத் தொடங்கியுள்ளோம்.
விஜயகாந்த் முதல் ரஜினிகாந்த் வரை: அரசியல் பின்னணி!
தனது அரசியல் பயணம் நீண்ட நெடியது என குறிப்பிட்ட அண்ணாமலை, தனது ஆரம்பகால அரசியல் அனுபவங்களையும், நடிகர் ரஜினிகாந்த் தமக்கு விடுத்த அழைப்பு குறித்தும் சில சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
கேப்டன் விஜயகாந்திடம் இன்டர்ன்ஷிப்.
கடந்த 2009-ல் லக்னோவில் படித்துக் கொண்டிருந்தபோது, தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் 3 மாதங்கள் இன்டர்ன்ஷிப் செய்துள்ளார். அதற்குப் பிறகு 10 ஆண்டுகள் கழித்துத்தான் பாஜகவில் இணைந்து 6 ஆண்டுகள் பயணித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்தின் அழைப்பு மற்றும் மன்னிப்பு
கடந்த 2020 ஆகஸ்ட் 24 அன்று அண்ணாமலை பாஜகவில் இணையவிருந்த போது, நடிகர் ரஜினிகாந்த் அவரைத் தொடர்புகொண்டு தமது இயக்கத்தில் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
ஆனால், கோவிட் காலத்தில் ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதே அவரது ஆரோக்கியத்திற்கு நல்லது என தான் நினைத்ததாகவும், தான் கொடுத்த வாக்குறுதியை மீறக் கூடாது என்பதால் பாஜகவில் இணைந்ததாகவும் கூறியுள்ளார்.
பின்னர் ரஜினியை நேரில் சந்தித்து இதற்கு தான் மன்னிப்பு கோரியதாகவும், பல்வேறு யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இதனைத் தற்போது கூறுவதாகவும் அண்ணாமலை விளக்கமளித்தார்.
பாஜாகவுடன் முரண்பட்டது ஏன்? டிசம்பர் 4-லேயே கொடுத்த ராஜினாமா!
பாஜகவில் பயணித்த 6 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் அடையாளம், கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை தான் ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை என்று அண்ணாமலை பெருமிதத்துடன் கூறினார். மேலும், கட்சித் தலைமையுடனான தனது முரண்பாடுகள் குறித்தும் அண்ணாமலை பேசியுள்ளார்.
கன்னட பாஜகவுக்கு எதிரான போராட்டம்
தமிழகத்தின் உரிமைக்காக, மேகதாது பிரச்சினையின் போது கர்நாடகத்தில் ஆட்சியில் இருந்த பாஜக அரசுக்கு எதிராகவே தமிழ்நாட்டில் போராட்டங்களை முன்னெடுத்ததாக குறிப்பிட்டார்.
டிசம்பர் 4-ல் பாஜகவில் இருந்து விலக முடிவு
பிரதமர் மோடி மீது தனக்கு எப்போதும் தனி மரியாதை உண்டு என்று கூறிய அவர், கடந்த 18 மாதங்களாக கட்சிக்குள் நீடித்த வந்த கருத்து வேறுபாடுகள் காரணமாக கடந்த 2025 டிசம்பர் 4 அன்றே கட்சியை விட்டு விலகுவதாக தெரிவித்துவிட்டதாக குறிப்பிட்டார்.
சட்டமன்ற தேர்தல் முடியும் வரை
ஆனால், தேர்தல் முடியும் வரை களத்தில் பணியாற்றிவிட்டு முடிவெடுக்குமாறு தலைமை கேட்டுக்கொண்டதால், கடைசி வரை தேர்தல் களத்தில் உழைத்ததாகத் தெரிவித்தார்.
"பிம்ப அரசியல் அல்ல... சாமானிய அரசியல்!" – தேர்தல் இலக்கு!
ஆனந்தத்தோடு இன்று முதல் "நம்ம இயக்கம்" என்ற புதிய அமைப்பை தொடங்கியுள்ளதாக கூறிய அண்ணாமலை, வரும் பொதுத் தேர்தலில் தங்களது கட்சி கண்டிப்பாக போட்டியிடும் என்பதை திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் சூழல் குறித்து அவர் பேசுகையில், "நான் பிம்ப அரசியலைத் தவிர்த்து, சாமானியர்களுக்கான அரசியலை முன்னெடுக்கப் போகிறேன். முதலில் இயக்கமாகத் தொடங்கி பல்வேறு தரப்பு மக்களையும் அதற்குள் கொண்டுவந்து, அவர்களுக்கு அரசியலைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
தொண்டர்களுக்கு வேண்டுகோள்
அதன் பின்னர்தான் இதனை ஒரு அரசியல் கட்சியாக மாற்ற வேண்டும். அதுவரை தொண்டர்கள் அனைவரும் பொறுத்திருக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் படிக்க:"ரஜினி கட்சிக்கு அழைத்தார்... ஆனால்!" - பாஜகவுடனான 18 மாத கருத்து வேறுபாடு குறித்து உண்மைகளை உடைத்த அண்ணாமலை!
=====