

"Rajini invited me to join his party.but!" Annamalai reveals the truth about his 18-month-long differences with the BJP!
பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தனது அரசியல் முடிவுகள் மற்றும் கடந்த கால நிகழ்வுகள் குறித்த பல்வேறு அதிரடித் தகவல்களை நேரலையில் பகிர்ந்துள்ளார்.
குறிப்பாக, நடிகர் ரஜினிகாந்த் தன்னை கட்சிக்கு அழைத்தது மற்றும் பாஜக தலைமையுடன் நீடித்து வந்த கருத்து வேறுபாடுகள் குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.
ரஜினிகாந்தின் அழைப்பை மறுத்தது ஏன்?
நேரலையில் பேசிய அண்ணாமலை, கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கத் திட்டமிட்டிருந்த போது நடந்த சுவாரசியமான சம்பவத்தை குறிப்பிட்டுள்ளார்.
"சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 2020 ஆம் ஆண்டு கட்சி தொடங்கியபோது அவரது கட்சியில் சேர எனக்கு அழைப்பு விடுத்தார். நான் ரஜினியிடம் இதுகுறித்து பல முறை பேசியுள்ளேன். எனினும், ரஜினி அழைத்தபோதும் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டுத்தான் நான் பாஜகவில் இணைந்தேன்.
அந்த கொரோனா காலகட்டத்தில் ரஜினி அரசியலுக்கு வராமல் இருந்ததே நல்லது; அவர் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜாகவுடன் 18 மாதங்களாக நீடித்த மோதல்!
பாஜகவிலிருந்து விலகியது திடீரென எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்பதைத் தெளிவுபடுத்திய அண்ணாமலை, கட்சித் தலைமைக்கும் தனக்குமான கருத்து வேறுபாடுகள் நீண்ட நாட்களாகவே நீடித்து வந்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், "பாஜகவுடனான கருத்து வேறுபாடுகள் கடந்த 18 மாதங்களாகவே நீடித்தன. இதனால், கடந்த டிசம்பர் மாதமே நான் கட்சியில் இருந்து விலகுவதாக பாஜக தலைமையிடம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துவிட்டேன்.
ஆனால், சட்டமன்ற தேர்தலை முடித்துவிட்டு ராஜிநாமா செய்யுமாறு கட்சித் தலைமை என்னை அறிவுறுத்தியது. அதன்படியே நான் இதுவரை பொறுமைகாத்து செயல்பட்டு வந்தேன்" என்று கூறியுள்ளார்.
"பெருமைமிகு இந்தியன்"
தனது அரசியல் கொள்கை மற்றும் அடையாளம் குறித்துப் பேசிய அவர், தமிழ்நாட்டின் அடையாளத்தையும், அதன் பாரம்பரியத்தையும் தான் ஒருபோதும் எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுத்ததில்லை என்றும், எப்போதுமே தான் ஒரு பெருமைமிகு இந்தியன் என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
======