தேசிய திரைப்பட விருதுகள் :
National Film Awards 2025 Winners List : ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் சிறந்த படங்கள் தேர்வு அவற்றில் நடித்தவர்களுக்கு மத்திய அரசு விருதுகளை வழங்கி, கௌரவித்து வருகிறது. அதன்படி, 2023ம் ஆண்டுக்கான, 71வது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சகம் அறிவித்தது. 40 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.
சிறந்த நடிகர் ஷாருக்கான் :
சிறந்த படமாக இந்தி திரைப்படமாக, 12வது பெயில் தேர்வு செய்யப்பட்டது. சிறந்த பொழுது போக்கு சித்திரமாக இந்தியில் வெளியான ராக்கி அவுர் ராணி கீ பிரேம் கஹானி படம் அறிவிக்கப்பட்டது. ஜவான் இந்தி திரைப்படத்தில் நடித்ததற்காக ஷாருக்கான் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டார். இதேபோன்று, 12வது பெயில் திரைப்படத்தில் நடித்த விக்ராந்த் மாஸ்ஸியும் சிறந்த நடிகருக்கான விருதினை பெறுகிறார். ஜவான் படத்தை தமிழகத்தை சேர்ந்த அட்லீ இயக்கினார்.
சிறந்த நடிகை ராணி முகர்ஜி :
சிறந்த நடிகையாக ராணி முகர்ஜி மிஸஸ் சாட்டர்ஜி Vs நார்வே இந்தி திரைப்படத்தில் நடித்தமைக்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். சிறந்த துணை நடிகையாக ஊர்வசி, (உள்ளொழுக்கு - மலையாள திரைப்படம்), ஜான்சி போடிவாலா (வாஸ் குஜராத்தி திரைப்படம்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
சிறந்த துணை நடிகர் எம்.எஸ். பாஸ்கர் :
சிறந்த துணை நடிகராக எம்.எஸ். பாஸ்கர்(Best Supporting Actor MS Bhaskar) (பார்க்கிங் - தமிழ் திரைப்படம்), விஜயராகவன் (பூக்காலம் - மலையாள திரைப்படம்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த இயக்குநருக்கான விருது சுதிப்தோ சென்னுக்கு தி கேரளா ஸ்டோரி என்ற இந்தி திரைப்பட்டத்தை இயக்கியதற்காக கிடைத்து இருக்கிறது.
சிறந்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் :
சிறந்த இசைக்கான விருது ஜி.வி.பிரகாஷ் குமார் (வாத்தி - தமிழ் திரைப்படத்துக்கான பாடல்கள்), ஹர்ஷ்வர்தன் (அனிமல் - இந்தி திரைப்பட பின்ணணி இசை) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. சிறந்த பின்னணி பாடகருக்கான விருது ரோஹித் (பிரேமிஸ்துன்னா - பேபி - தெலுங்கு திரைப்படம்), சிறந்த பின்னணி பாடகிக்கான விருது ஷில்பா ராவ் (ஜவான் - சலியா - இந்தி திரைப்படம்) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சிறந்த பாடலுக்கான விருது கசர்லா ஷியாம் (பலகம் - ஊரு பல்லேட்டுரு - தெலுங்கு திரைப்படம்), சிறந்த நடனத்துக்கான விருது வைபவி மெர்சன்ட் (ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி - திந்தோரா பஜே ரே - இந்தி திரைப்படம்), சிறந்த சண்டை பயிற்சிக்கான விருது நந்து பிருத்வி (ஹனுமன் - தெலுங்கு திரைப்படம்), சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது பிரசாந்து மகோபாத்ரா (தி கேரளா ஸ்டோரி) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த கதைக்கான விருது - ராம்குமார் பாலகிருஷ்ணன் :
சிறந்த கதை வசனத்துக்கான விருது ராம் குமார் பாலகிருஷ்ணன் (பார்க்கிங் - தமிழ் திரைப்படம்), சாய் ராஜேஷ் நீலம் (பேபி - தெலுங்கு திரைப்படம்), தீபக் கின்கிரானி (சிர்ப் ஏக் பந்தா காபிஹே - இந்தி திரைப்படம்) சவுன்ட் டிசைனுக்கான விருது சச்சின் சுதாகரன், ஹரிஹரன் முரளிதரன் (அனிமல் - இந்தி திரைப்படம்), சிறந்த எடிட்டிங் விருது மிதுன் முரளி (பூக்காலம் - மலையாள திரைப்படம்) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
சிறந்த தமிழ்ப்படம் பார்க்கிங் :
சிறந்த தமிழ் படமாக பார்க்கிங் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த பிரிவில் படத்தின் தயாரிப்பு நிறுவமான சோல்சர்ஸ் பேக்டரி, பேசன் ஸ்டூடியோ, இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
பார்க்கிங் படத்திற்கு 3 விருதுகள் :
ஆவண படப் பிரிவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது சரவணமுத்து, சவுந்திரபாண்டி, மீனாட்சி சோமன் (லிட்டில் விங்ஸ் - தமிழ் குறும்படம்) ஆகியோருக்கு வழங்கப்பட்டு உள்ளது. சிறந்த தமிழ் திரைப்படம், கதை வசனம், துணை நடிகர் ஆகிய பிரிவுகளில் பார்க்கிங் திரைப்படம் 3 விருதுகளை வென்றுள்ளது.
=============