New GST 2.0 Impact on Amul Milk Pocket Price : நாட்டின் மிகவும் பிரபலமான பால் பிராண்டுகளில் ஒன்றான அமுல், செப்டம்பர் 22 முதல் பாக்கெட் பால் விலைகளில் எந்த குறைப்பும் இருக்காது என்று தெளிவுபடுத்தியுள்ளது, ஏனெனில் இது ஏற்கனவே பூஜ்ய சதவீத ஜிஎஸ்டியில் தான் உள்ளது என தெளிவுபடுத்தியுள்ளது.
அமுல் பொருட்களை சந்தைப்படுத்தும் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் (ஜிசிஎம்எம்எஃப்) நிர்வாக இயக்குநர் ஜெயன் மேத்தா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், பாக்கெட் பாலின் விலைகளில் எந்த மாற்றமும் முன்மொழியப்படவில்லை, ஏனெனில் ஜிஎஸ்டியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பாக்கெட் பாலுக்கு எப்போதும் பூஜ்ய சதவீத ஜிஎஸ்டி(Amul Milk GST Rate) தொடர்கிறது என்றார்.
முன்னதாக, சில ஊடகங்களில் ஜிஎஸ்டி 2.0 நடைமுறைக்கு வரும்போது பாக்கெட் பால் விலைகள் 3 முதல் 4 ரூபாய் வரை குறையலாம் என்று கூறியிருந்தன.
இதனை மறுத்த மேத்தா, அந்த தகவல்கள் தவறானவை என்று தெளிவுபடுத்தினார், ஏனெனில் பாக்கெட் பால் எப்போதும் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. புதிய வரி கட்டமைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள சலுகை UHT பாலுக்கு மட்டுமே பொருந்தும், இது இப்போது 5 சதவீத ஜிஎஸ்டியில் இருந்து பூஜ்ய சதவீதமாக குறைக்கப்பட்டதால் தறபோதைய விலையைவிட மலிவாக கிடைக்கும் என்றார்.
பாலில் UHT என்பது அல்ட்ரா-ஹை டெம்பரேச்சர் (அல்லது அல்ட்ரா ஹீட் ட்ரீட்மென்ட்) செயல்முறையைக் குறிக்கிறது, இதில் பால் குறைந்தபட்சம் 135°C (275°F) வெப்பநிலையில் சில வினாடிகள் சூடாக்கப்படுகிறது, இதனால் கிட்டத்தட்ட அனைத்து நுண்ணுயிரிகளும் அழிக்கப்பட்டு, ஒரு பொருள் உருவாகிறது. இந்த செயல்முறை, டெட்ரா பேக் போன்ற அசெப்டிக் பேக்கேஜிங்குடன் இணைந்து, UHT பாலுக்கு குளிர்சாதன பெட்டி இல்லாமல் பல மாதங்கள் ஆயுளை அளிக்கிறது.
செப்டம்பர் 3 அன்று, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய ஜிஎஸ்டி நடவடிக்கைகளை அறிவித்தார். இது ஏழை நடுத்தரை மக்களின் வாழ்வை எளிதாக்குவதற்கும் பொருளாதார செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கும் உருவாக்கப்பட்ட வரலாற்று சீர்திருத்தம் என்று அழைத்தார். அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தம் என்று அழைக்கப்படும் இந்த விரிவான விகித குறைப்புகள், குடும்பங்கள், விவசாயிகள், வணிகங்கள் மற்றும் மருத்துவத் துறைக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க : 0% GST: பால் to மருந்துகள் வரை : இனி வரி இல்லை, மக்கள் மகிழ்ச்சி
56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்(GST Council Meeting 2025), தற்போதைய 12 சதவீதம் மற்றும் 28 சதவீத விகிதங்களை ஒருங்கிணைத்து, ஜிஎஸ்டி விகிதங்களை 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என்ற இரண்டு பிரிவுகளாக மறுசீரமைக்க முடிவு செய்தது. இந்த நடவடிக்கை நாட்டிற்கு ஒரு முக்கியமான தீபாவளி பரிசாகக் கருதப்படுகிறது.