PMK Leader Ramadoss Removed Anbumani Issue : பாட்டாளி மக்கள் கட்சியில் கடந்த சில மாதங்களாகவே கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கும், அவருடைய மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் பனிப்போர் தொடர்ந்து வந்தது. அன்புமணி நியமித்த நிர்வாகிகளை ராமதாஸ் நீக்குவதும் ராமதாஸ் நியமித்த நிர்வாகிகளை அன்புமணி நீக்குவதும்(Anbumani Ramadoss) தொடர்ந்து வந்தது. பாமகவை நிறுவிய தான்தான் கட்சியின் தலைவர், தான் எடுக்கும் முடிவே இறுதியானது என்று ராமதாஸ் தெரிவித்து வந்தார். அன்புமணியின் பதவிக்காலம் முடிவடைந்தது எனவும் அவர் கூறினார்.
மத்தியஸ்தர்கள் மூலம் பஞ்சாயத்து செய்யும் முயற்சிகள் யாவும் தோல்வி அடைந்தன. அவ்வப்போது செய்தியாளர்களை சந்தித்து வந்த ராமதாஸ், அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பொய்களை பரப்பி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ராமதாஸ்க்கு இருக்கை போடப்பட்டு அன்புமணி அணியினரால் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. பூம்புகாரில் ராமதாஸ் பெண்கள் மாநாட்டை நடத்தினார். இதனிடையே கட்சிக்கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதாக கூறி, ராமதாஸ் தரப்பில் விளக்கம் கேட்டு அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு பதில் வரவில்லை. மேலும் காலக்கெடு வழங்கப்பட்டும் பதில்வரவில்லை.
இந்த நிலையில்தான் விழுப்புரம் தைலாபுரத்தில் செய்தியாளர்களுக்கு இன்று ராமதாஸ் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அன்புமணி மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்து, அவரிடம் விளக்கம் கேட்டு ஒழுங்கு நடவடிக்கைக்குழு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதற்கு கடிதம் மூலமாகவோ நேரிலோ அன்புமணி எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அவருக்கு 2 முறை போதிய அவகாசம் வழங்கப்பட்டும் பதில் அளிக்கவில்லை. இதனால் குற்றச்சாட்டுகள் உண்மை என்பதாகக்கொண்டு அவர் மீது ஒழுங்கு நடவடிக்கைகுழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதன்படி கட்சியின் செயல்தலைவர் , அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அன்புமணி நீக்கப்படுகிறார். பாமக உறுப்பினர்கள் யாரும் இனி அன்புமணியுடன் கட்சிரீதியாக எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது.
அன்புமணியுடன் இருப்பவர்கள் தனிக்கட்சியாக செயல்படுவது போல் உள்ளனர். அவர்கள் மீது வருத்தம் உள்ளது. என்றாலும் அவர்கள் யாவரும் தனியாகவோ கூட்டமாகவோ என்னிடம் வந்து தங்கள் செயல்பாடுகளுக்கு மன்னிப்புக்கோரினால் அவர்களை ஏற்கத் தயார்.
தேவைப்பட்டால் அன்புமணி இனி தனிக்கட்சி ஆரம்பிக்கலாம். அப்படியே தொடங்கினாலும் அது வளராது. நான் தொடங்கிய கட்சி, நிறுவனர் என்ற முறையில் எனக்கு முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது. மகனாகவே இருந்தாலும் கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டால் நடவடிக்கை உறுதி.
மேலும் படிக்க : Ramadoss : அன்புமணிக்கு அதிகாரம் இல்லை : ராமதாஸ் திட்டவட்டம்
அன்புமணிக்கு தலைமைப்பண்பு இல்லை என்று ஏற்கனவே கூறியிருந்தேன். அவர் பொய்களை தொடர்ந்து பரப்பி வருகிறார். என் இருக்கையில் உளவு கருவி வைத்து என்னை வேவு பார்த்தார் அன்புமணி. பிறர் வேவு பார்க்கலாம். மகன் இப்படிச் செய்யலாமா ? அரசியல் தலைவராக செயல்பட அன்புமணிக்கு தகுதி இல்லை. கட்சியின் வளர்ச்சிக்கு தடையாக இருந்ததால் அன்புமணி நீக்கப்படுகிறார். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.