PMK Founder Ramadoss on Voting Rights Of Eelam Tamilians Google
தமிழ்நாடு

ஈழத் தமிழர்கள் தலைமுறை சுதந்திரமாக வாழ வேண்டும்- ராமதாஸ்!

Ramadoss on Voting Rights Of Eelam Tamilians : ஈழத் தமிழர்களுக்க வாக்குரிமை அளிப்பது அவசியம் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Bala Murugan

ராமதாஸ் அறிக்கை

Ramadoss on Voting Rights Of Eelam Tamilians : பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கையில் இருந்து 1983-ம் ஆண்டு ஈழத் தமிழர்கள் அங்கு நடந்த போர் சூழல் காரணமாக சொத்துகளை இழந்து தமிழ் மண்ணுக்கு லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் குடியேறினர். அதற்குப் பிறகும், பல்வேறு காலகட்டங்களிலும், குறிப்பாக, 2009- வரை பல்லாயிரக்கணக்கான ஈழ தமிழர்கள் தமிழகத்துக்கு அடைக்கலம் வந்தனர். கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஈழத் தமிழர்கள் இந்தியாவில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் தமிழகத்திலுள்ள 116 முகாம்களில் வசிக்கின்றனர். பல ஆண்டுகள் இவர்கள் இங்கு வாழ்ந்தாலும் இந்திய மக்களை போல சுதந்திரமாக வாழ முடியாத சூழல் இன்றும் நிலவுகிறது என்று தெரிவித்தார்.

கூலிகளாக வாழ்வாதாரத்தை நடத்துகின்றனர்

மேலும், 30 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வந்த ஒரு தலைமுறையினரின் அடுத்த தலைமுறை பிள்ளைகள் இங்குதான் பிறந்தார்கள். இவர்களில் பலர் பள்ளிப் படிப்பை முடித்தும், சிலர் பட்டப் படிப்பையும் முடித்து உள்ளனர். ஆனால் எந்த படிப்பு படித்தாலும் அவர்கள் அரசு பணிகளில் தேர்வு செய்ய முடியாத அளவிற்கு சட்டங்கள் உள்ளன. அரசின் மூலம் தருகின்ற சிறிய தொகை மற்றும் அன்றாட கூலிகளாக வேலை செய்து தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.

ஈழத் தமிழர்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறது

இவர்களுக்கு அரசின் பல சலுகைகளும் கிடைப்பதில்லை. அரசு வேலைகளில் நேபாளம், பூடான் நாட்டைச் சேர்ந்தவர்கள் எல்லாம் விண்ணப்பிக்கலாம் என்கிற வரையறை இருக்கும்போது. நம் தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்களுக்கு அந்த உரிமை மறுக்கப்படுகிறது. அரசாங்கம் ஒதுக்கியிருக்கும் இடத்தில்தான் அவர்கள் வீடு கட்டிக் கொள்ள முடியும். அவர்கள் அகதிகளாக வந்த போது ஒதுக்கப்பட்ட அதே அளவுதான் தற்போது வரை அவர்களுக்கு உள்ளது என்று விமர்சித்துள்ளார்.

நிரந்தரமாக இருக்க விரும்புகிறார்கள்

தற்போது அவர்களின் குடும்ப பெருக்கத்தினால் அவர்கள் பிள்ளைகளுக்கு திருமணமாகி பிள்ளைகளும் பிறந்திருப்பார்கள். அரசு கொடுத்த அதே அளவு இடத்தில் எப்படி அவர்கள் குடும்பமாக வாழ முடியும்.இலங்கையில் அவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு விட்டது. அங்கு சென்றாலும் வாழ முடியாது என்பதால் தான் இங்கேயே நிரந்தரமாக இருக்க விரும்புகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அகதிகளுக்கான ஒப்பந்தம் கையொப்பமிடவில்லை

இங்கு நிரந்தரமாக வசிக்க முடியாத பட்சத்தில் சிலர் கனடா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளுக்குச் செல்ல முயற்சித்தால், அந்த நாடுகளே ஏற்றுக்கொண்டாலும் இந்தியா அனுப்ப மறுக்கிறது. ஐ.நா.வில் அகதிகளுக்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிடவில்லை. அதனால், ஐ.நா.வும் அகதிகளுக்கான உதவியை இந்தியாவில் செய்ய முடியவில்லை.

ஈழத்தமிழர்கள் சுதந்திரமாக வாழவில்லை

ஈழத்தமிழர்கள் அத்துமீறிக் குடியேறிவர்கள் இல்லை. போர்க் காலங்களில் உயிரைக் காக்க இந்தியாவை நம்பி வாழ வந்தவர்கள். தற்போது உயிரோடு வாழ்கிறார்களே தவிர அவர்கள் உரிமைகள் பெற்று சுதந்திரமாக வாழவில்லை. உலகின் பல நாடுகள் ஈழத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்கியுள்ளன. இந்தியாவில்தான் ஈழத்தமிழ் மக்கள் அகதி முகாம்களிலேயே ஆயுள் முழுதும் வாழ்ந்து முடிக்கிறார்கள். முந்தைய தலைமுறை தான் அப்படியான வாழ்வை வாழ்ந்தாலும், தற்போதைய தலைமுறையாவது சுதந்திரமாக வாழ வேண்டும்.

வாக்குரிமை அளிக்க வேண்டியது அவசியம்

அதற்கு முதல் கட்டமாக தமிழ்நாட்டில் தற்போது தொடங்கவுள்ள தீவிர வாக்காளர் திருத்த பணியின்போது தமிழ்நாட்டில் வசிக்கும் ஈழத் தமிழர்களுக்கு அவர்களின் விருப்பத்தின் பெயரில் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மாநில அரசு மத்திய அரசிடம் கேட்டுப் பெற வேண்டும். மத்திய அரசும் ஈழத் தமிழர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு வாக்குரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்குரிமை அளிக்கப்பட்டால்தான் ஈழத் தமிழர்களின் உரிமைக்காக அந்தந்த பகுதி மக்கள் பிரதிநிதிகள் பணியாற்றுவார்கள் ஆகவே இவர்களுக்கு வாக்குரிமை அளிக்க வேண்டியது அவசியம் ஆகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.