PMK Leader Ramadoss vs Anbumani Clash Update in Tamil 
தமிழ்நாடு

பாமக குழுத்தலைவர் யார்? : சட்டமன்றத்திலும் ராமதாஸ்-அன்புமணி மோதல்

Ramadoss vs Anbumani Clash Update : சட்டமன்ற பாமக குழுத் தலைவர் யார் என்பதிலும், ராமதாஸ், அன்புமணி தரப்புக்கு இடையே மோதல் வெடித்து இருக்கிறது.

Kannan

பாமகவில் நீடிக்கும் மோதல் :

Ramadoss vs Anbumani Clash Update : தமிழகத்தின் வட மாவட்டங்களில் வலுவான கட்சியாக செயல்பட்டு வரும் பாமகவில் அண்மையில் நடக்கும் நிகழ்வுகள், பெரிய பின்னடைவை ஏற்படுத்தி வருகின்றன. ஒருபக்கம் நிறுவனர் ராமதாஸ், தானே உண்மையான பாமக என்று குரல் கொடுத்து வருகிறார். பொதுக்குழுவால் தேர்ந்து எடுக்கப்பட்ட தானே பாமக தலைவர் என்று அவர் மகன் அன்புமணி மறுபக்கம் முழங்கி வருகிறார்.

அன்புமணியை நீக்கிய ராமதாஸ் :

இருவரும் சேர்ந்து நிர்வாகிகளை நியமிப்பது, நீக்குவது என கோதாவில் இறங்கி, தனித்தனியாக பொதுக்குழுவை நடத்தினார்கள். அன்புமணி நடத்திய பொதுக்குழு செல்லாது என்று கூறிய ராமதாஸ், ஒரு கட்டத்தில் அன்புமணியை கட்சியில் இருந்து நீக்கியதோடு(Anbumani Dismissed From PMK), அவரது ஆதரவாளர்களுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்தார்.

யாருக்கு மாம்பழம் - நீடிக்கும் சஸ்பென்ஸ் :

இதனிடையே, கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் தங்களுக்கே வழங்கி இருப்பதாகவும், மாம்பழ சின்னம்(PMK Symbol) தங்களிடம் இருப்பதால் உண்மையான பாமக நாங்கள்தான் என்று அன்புமணி தரப்பு ராமதாஸ் அணிக்கு சவால் விடுத்தது. பிகார் தேர்தலில் போட்டியிடுவதாக பொய் கூறி மாம்பழ சின்னத்தை அன்புமணி பெற்றதாகவும், விரைவில் பாடம் புகட்டப்படும் என்று எச்சரித்தார் ராமதாஸ்.

சட்டமன்றத்திலும் பாமக மோதல் :

தந்தை - மகன் இடையேயான மோதல், இப்போது சட்டமன்றம் வரை வந்திருக்கிறது. தமிழக சட்டசபை கூட்டம் அக்டோபர் 14ம் தேதி சட்டசபை கூட்டம்(TN Assembly Meet Date) தொடங்குகிறது. அப்போது சட்டமன்ற பாமக தலைவர் யார் என்பதில் தான் இருவருக்கும் இடையே மோதல் வெடித்து இருக்கிறது.

சட்டமன்ற பாமக தலைவர்? :

தமிழக சட்டமன்றத்தில் பாமகவுக்கு 5 எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்களின் 3 பேர் அன்புமணி அணியிலும், 2 பேர் ராமதாஸ் அணியிலும் இருக்கின்றனர். ஏற்கனவே, பாமக சட்டமன்ற கொறடா அருளை மாற்றக்கோரி சபாநாயகரிடம் அன்புமணி தரப்பு மனு அளித்தது. இரண்டு வாரத்தில் சட்டமன்ற கூட இருப்பதால், பாமக சட்டமன்ற குழுத் தலைவராக இருக்கும் ஜி.கே.மணியை மாற்றக் கோரி அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைச் செயலாளரிடம் மனு அளித்தனர்.

வரிந்து கட்டும் அன்புமணி :

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் கே. பாலு, ”தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரனை சட்டமன்ற பாமக தலைவராக தேர்வு செய்துள்ளோம். பாமக தொண்டர்கள் அன்புமணி தலைமையை ஏற்று செயல்பட்டு வருகின்றனர். பாமக எம்எல்ஏக்கள் 5 பேரில் 3 பேரின் ஆதரவு அன்புமணிக்கே உள்ளது.

மேலும் படிக்க : PMK Ramadoss vs Anbumani : யார் கை ஓங்கும்? சோர்வடையும் தொண்டர்கள்

ஜி.கே. மணி vs வெங்கடேஸ்வரன் :

அனைத்து கட்சி கூட்டம் உள்ளிட்டவற்றுக்கு எங்களையே அழைக்க வேண்டும். சின்னம், வேட்பாளர் படிவம் உள்ளிட்டவற்றில் கையெழுத்திடும் அதிகாரம் அன்புமணிக்கே உண்டு. பீகாரில் போட்டியிடுவது குறித்து உரிய நேரத்தில் கட்சி முடிவு எடுக்கும் என்று கூறினார். எனவே, அக்டோபர் 14ம் தேதி சட்டமன்ற பாமக தலைவராக முதல் வரிசையில் அமரப் போவது ஜி.கே.மணியா, வெங்கடேஸ்வரனா? என்ற எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது.

====================