பாமகவில் உச்சக்கட்ட மோதல் :
Ramadoss About Anbumani : பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ்க்கும், செயல் தலைவர் அன்புமணிக்கும் இடையேயான மோதல் இனி தீர்க்க முடியாத நிலைக்கு சென்று விட்டதாகவே தெரிகிறது. இருவரும் தனித்தனியாக பொதுக்குழுவை கூட்ட அழைப்பு விடுத்து இருக்கும் நிலையில், அன்புமணி மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருக்கிறார் ராமதாஸ்.
அன்புமணி பொய் சொல்கிறார் :
திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ்(Ramadoss Press Meet), “ என்னை சந்திக்க வந்ததாக அன்புமணி பொய் சொல்கிறார். தைலாபுரம் வீட்டுக்கு என்னை சந்திக்க வரவில்லை. நான் கதவை அடைக்கவுமில்லை. பொய்களையும் கட்டுக் கதைகளையும் தொண்டர்களிடத்தில் அன்புமணி பரப்பி வருகிறார்
பாமகவை பறிக்க அன்புமணி சூழ்ச்சி :
பாமகவை பறிக்க அன்புமணி(Anbumani) சூழ்ச்சி செய்கிறார். பாமகவில் உள்ளவர்களிடம் பணத்தை கொடுத்து எனக்கு எதிராக செயல்படுமாறு தூண்டுகிறார். ஐயா, ஐயா என்று சொன்னவர்களை ராமதாஸ் என்று சொல்ல வைத்தது அன்புமணிதான். பேச்சுவார்த்தைக்கு நான் வரமறுப்பதாக அன்புமணி பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்.
பணம் கொடுத்து நிர்வாகிகள் வளைப்பு :
பாமகவின் கிளை 34 அமைப்புகளின் நிர்வாகிகளை பணம் தந்து வளைத்து விட்டார் அன்புமணி. பாமகவுக்கு மீண்டும் அங்கீகாரம் பெறும் நோக்கில்தான் தலைவராக பொறுப்பேற்றுள்ளேன். பணம் கொடுத்து சமூகவலைதளங்களில் என்னை பற்றி தவறாக எழுதவும் சொல்கிறார். பாமகவுக்கு நான் தலைமை ஏற்கக் கூடாது என்கிறார் அன்புமணி.
அன்புமணி மீது ராமதாஸ் காட்டம் :
எதிரிகள் கூட என்னை பற்றி இவ்வளவு கேவலமான விமர்சனங்களை வைத்ததில்லை. பொதுவெளியில் அன்புமணி என்னை பற்றி விமர்சிக்காமல் நாடகம் போடுகிறார். ஊடகம் முன்பு மனக்குமுறலை கூறுவதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுகிறேன். அன்புமணியை நல்ல பள்ளியில் படிக்க வைத்து எம்பியாக்கி, கட்சிப் பொறுப்புகளை ஒப்படைத்தேன். கூட்டணி, வேட்பாளர் தொடர்பாக அன்புமணி பிரச்சினை செய்கிறார்.
டம்மியாக இருக்க தயாராக இல்லை :
அன்புமணியிடம் கட்சியை கொடுத்துவிட்டு நான் டம்மியாக தைலாபுரத்தில் இருக்க முடியாது. கட்சியின் வளர்ச்சிக்காக இதுவரை அன்புமணி எதையும் செய்யவில்லை. எனவே, செயல் தலைவர் பொறுப்பை ஏற்று பிழைத்துக்கொள்வதுதான் அவருக்கு ஒரே வழி.
மேலும் படிக்க : Ramadoss : அன்புமணிக்கு அதிகாரம் இல்லை : ராமதாஸ் திட்டவட்டம்
பாமகவை ஆலமரமாக வளர்த்து இருக்கிறேன் :
என் வியர்வையில் பாமக ஆலமரமாக வளர்ந்துள்ளது. கடுமையாக உழைத்து தண்ணீருக்கு பதில் வியர்வையை ஊற்றி கட்சியை ஒரு ஆலமரமாக வளர்த்தேன். ஆலமரக் கிளையில் இருந்தே கோடாரியை செய்து அதே மரத்தை வெட்ட முயல்கிறார் அன்புமணி. இதற்கு ஒருகாலும் நான் அனுமதிக்க மாட்டேன்” இவ்வாறு ராமதாஸ்(Ramdoss) தெரிவித்தார்.
============