Political Leaders Welcome The Supreme Court Judgement on Karur Stampede Death Case in Tamil 
தமிழ்நாடு

கரூர் சம்பவம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவு : தலைவர்கள் வரவேற்பு

Supreme Court Judgement on Karur Stampede Death Case : கரூர் கூட்ட நெரிசல், உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதை, பல்வேறு தலைவர்கள் வரவேற்று உள்ளனர்.

Kannan

Supreme Court Judgement on Karur Stampede Death Case : 41 பேரை பலி கொண்ட கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை, சிபிஐ விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

திமுக வன்மப் பிரசாரம் செய்கிறது

கரூர் உயிர் பலி சம்பவத்தில் தனது பொறுப்பை சரியாக நிறைவேற்றாத திமுக அரசு தவெகவுக்கு எதிராக வன்ம பிரசாரம் செய்து வருகிறது. திமுக அரசின் விசாரணையில் உரிய நீதி கிடைக்குமா என்ற கவலை அனைவருக்கும் இருந்தது. இந்த வழக்கில் தற்போது திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரியான சவுக்கடி கொடுத்துள்ளது.

நீதிமன்ற உத்தரவை வரவேற்கிறேன் - எல். முருகன்

கரூர் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் கரூர் கொடூர சம்பவத்தில் உண்மை விரைவில் வெளிவரும்; சம்பந்தப்பட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவர் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

பாரபட்சமற்ற விசாரணை - எடப்பாடி

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழுவின் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை என்பது மக்களின் உரிமை என்ற அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற உத்தரவை அதிமுக வரவேற்கிறது.

உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி - நயினார்

கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் கண்காணிப்புப் குழுவையும் அமைத்துள்ள உச்சநீதிமன்றத்திற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தவறிழைத்தோர் தண்டிக்கப்படுவர்

இந்த சம்பவத்தில் தங்கள் மீது எந்தவிதத் தவறும் இல்லை என்பதை நிறுவ, எதிர்தரப்பினரைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தி தங்கள் இஷ்டத்திற்குக் கட்டுக்கதைகளைப் புனைந்து வந்த திமுக அரசின் அவசரத்திற்குப் பின்னால் ஏதோவொரு அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது என்ற மக்களின் சந்தேகத்திற்குக் கூடிய விரைவில் விடை கிடைக்கப்போகிறது. தங்களின் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்காக அப்பாவிப் பொதுமக்களைக் காவு வாங்கிய கயவர்கள் கருணையின்றி தண்டிக்கப்படுவார்கள்.

மேலும் படிக்க : "CBI கையில்" கரூர் வழக்கு : ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு

சீமான் ஏன் பதறுகிறார்? - அண்ணாமலை

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். சிபிஐ விசாரிப்பதில் சீமானுக்கு ஏன் பதற்றம் என்று தெரியவில்லை. சிபிஐ விசாரணை கோரியது பாஜக தான். கரூர் கூட்டத்தில் மர்ம நபர்கள் கலந்து இருந்தார்களா என விசாரிக்க வேண்டும். சிபிஐ விசாரணையை கண்காணிக்க உச்சநீதிமன்றம் குழு அமைக்க உத்தரவிட்டது வரவேற்கிறோம்.

--