
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் :
Karur Stampede Death Case Update : கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை தமிழக அரசு நியமித்தது. நீதிபதி அருணா ஜெகதீசனும் தனது விசாரணையை தொடங்கி விட்டார்.
அஸ்ரா கர்க் தலைமையில் SIT
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இரண்டு நீதிபதிகளை கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. இதனிடையே, அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறையை வகுக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி,
கரூர் போலீசாரின் விசாரணைக்கு தடைவிதித்து, வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து உத்தர விட்டார். அஸ்ரா கர்க்கும் கரூருக்குச் சென்று, உயிர் பலிக்கு காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டார்.
கரூர் வழக்கு - உச்ச நீதிமன்றம் விசாரணை
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ஏற்காத தமிழக வெற்றிக் கழகம், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. 'சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது தவறு என்றும், எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சாரியா அமர்வு கடந்த வாரம் விசாரித்தது. இரு நீதிமன்றங்கள் விசாரித்தது ஏன் உள்பட அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
கரூர் வழக்கு - சிபிஐக்கு மாற்றம்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம், வழக்கை சிபிஐ விசாரணை மாற்றி அதிரடி உத்தரவினை பிறப்பித்தது. மேலும் விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதியை தவிர்த்து மற்ற இரண்டு பேரும் ஐபிஎஸ் அதிகாரிகளாக இருப்பார்கள். இந்த வழக்கில் சிபிஐ நடத்தும் விசாரணையை மாதந்தோறும் இந்த குழுவிடம் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அறிக்கை கேட்கும் உச்ச நீதிமன்றம்
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை SITக்கு மாற்றி, கிரிமனல் ரிட் வழக்காக விசாரித்தது எப்படி என்று, சென்னை உயர் நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்யவும் உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்து இருக்கிறது.
மேலும் படிக்க : Karur Stampede Death : விஜய், தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
கரூர் வழக்கில் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்திற்கு கிடைத்த வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. அதேசமயம், தமிழக அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
==========