ஆடித் திருவாதிரை விழா :
PM Modi Visit Gangaikonda Cholapuram : அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தில், மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கட்டப்பட்டு ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
சோழ தேசத்தில் பிரதமர் மோடி :
இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர், ‘வணக்கம் சோழ மண்டலம்’ என்று கூறி உரையைத் தொடங்கினார். “நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க, இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க” என்று தமிழில் சிவனைப் போற்றினார்.
140 கோடி இந்தியர்களுக்காக வழிபாடு :
“பிரகதீஸ்வரரின் பாதங்களில் அமர்ந்து வணங்கும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. 140 கோடி இந்தியர்களின் நலனுக்காகவும், இந்தியாவின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்காகவும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோவிலில் நான் பிரார்த்தனை செய்தேன். அனைவருக்கும் சிவபெருமானின் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும்.
வணிகத்தில் சிறந்த சோழ மன்னர்கள் :
சோழ மன்னர்கள் இலங்கை, மாலத்தீவுகள் மற்றும் தென்கிழக்கு ஆசியா போன்ற பகுதிகளுக்கு சென்று ராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தினர். நான் மாலத்தீவிலிருந்து இந்தியா வந்ததும், தற்செயலான நிகழ்வு. கங்கை கொண்ட சோழபுரம் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது என்னுடைய பாக்கியம்.
சோழர்கள் ஆட்சி இந்தியாவின் பொற்காலம் :
சோழப் பேரரசு இந்தியாவின் பொற்காலங்களில் ஒன்று என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். இந்தியாவின் ஜனநாயகத்தின் தாய் என்ற பாரம்பரியத்தை சோழர்கள் முன்னெடுத்துச் சென்றனர். இங்கு ஜனநாயக முறைப்படி நடத்தப்பட்ட தேர்தல்களே இதற்கு சான்று. பிரிட்டனுக்கு முன்பாகவே சோழர்கள் குடவோலை முறையில் ஆட்சி செய்தனர்.
'ஒரே பாரதம், சிறந்த பாரதம்' :
சோழ மன்னர்களின் இந்த செயல்பாடுகள், 'ஒரே பாரதம், சிறந்த பாரதம்' என்ற மாபெரும் பாரம்பரியத்துக்கான புதிய ஆற்றல், புதிய சக்தி, புதிய உத்வேகத்தை அளிக்கின்றன. இன்று உலகமே நிலையற்ற தன்மை, வன்முறை மற்றும் சுற்றுச்சூழல் போன்ற பிரச்சினைகளால் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், தீர்வுகளுக்கான பாதையை சைவ சிந்தாந்த கொள்கைகள் நமக்குக் காட்டுகின்றன.
அன்பே சிவத்தை ஏற்க வேண்டும் :
அன்பே சிவம் என்ற திருமூலரின் கருத்தை உலகம் ஏற்றுக்கொண்டால், பெரும்பாலான நெருக்கடிகள் தானாகவே தீர்க்கப்படும். இந்தியா இந்தக் கருத்தை ஒரு உலகம், ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம் என்ற வடிவத்தில் முன்னெடுத்துச் செல்கிறது. ராஜராஜ சோழன் ஒரு சக்திவாய்ந்த கடற்படையை உருவாக்கினார். அதை ராஜேந்திர சோழன் மேலும் வலுப்படுத்தினார். சோழப் பேரரசு இந்தியாவிற்கான ஒரு பண்டைய வரைபடத்தைப் போன்றது. நீர் மேலாண்மையில் சோழர்கள் முன்னோடியாகத் திகழ்ந்தனர்.
ராஜராஜன், ராஜேந்திரனுக்கு சிலைகள் :
இவர்களை போற்றும் விதமாக ராஜராஜ சோழன்(Rajaraja Cholan Statue) மற்றும் அவரது மைந்தன் ராஜேந்திர சோழன் இருவருக்கும் பிரம்மாண்ட சிலைகள் தமிழ்நாட்டில் அமைக்கப்படும். இறையாண்மையை தாக்கினால் இந்தியாவில் பதில் எப்படி இருக்கும் என்பதை ஆபரேஷன் சிந்தூரின் போது உலகம் கண்டு வியந்தது.
ஆபரேஷன் சிந்தூர் :
இந்தியாவின் எதிரிகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு உலகில் பாதுகாப்பான இடம் இல்லை என்பதை ஆபரேஷன் சிந்தூர் தெளிவுபடுத்தியுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் ஒரு புதிய உத்வேகத்தைத் தூண்டியுள்ளது. புதிய தன்னம்பிக்கையை விதைத்துள்ளது. நாடு முழுவதும் மக்கள் அதனை கொண்டாடுகிறார்கள். அது இந்தியாவின் வலிமையையும் உறுதியையும் உலகமே ஒப்புக்கொள்ள வைத்துள்ளது” இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
=============