
சோழ மாமன்னன் ராஜராஜன் :
Rajendra Cholan Gangaikonda Cholapuram Temple : தஞ்சையை தலைமையிடமாக கொண்டு சோழர்கள் ஆட்சி செய்தனர். அவர்களின் பொற்கால ஆட்சி என்று ராஜராஜசோழன் ஆட்சியை குறிப்பிடலாம். தலைசிறந்த மன்னனாக திகழ்ந்த ராஜராஜனின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் அவரது மகன் ராஜந்திர சோழன் வெற்றிகளை குவித்து, தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்தார். அவரது பிறந்த நாளான இன்று, கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
’கடாரம் கொண்ட ராஜேந்திர சோழன்’ :
தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனுக்கும், திரிபுவனமாதேவிக்கும் மார்கழி திருவாதிரையன்று பிறந்தவர் ராஜேந்திர சோழன்(Rajendra Cholan I). இயற்பெயர் மதுராந்தகன். இவனது ஆட்சிக்காலம் 1012 முதல் 1044 வரை. கடல் கடந்து பல நாடுகளை வென்றதால் இவருக்கு 'கடாரம் கொண்டான்' என்ற பட்டம் சூட்டப்பட்டது.
தஞ்சை வழியில் பிரமாண்ட கோவில் :
தன் தந்தை தஞ்சாவூரில் கட்டிய பிரமாண்ட கோயிலை பார்த்து, பலமுறை வியந்து போன ராஜேந்திர சோழன், தானும் அவ்வாறு ஒரு கோவிலை கட்ட வேண்டும் என்று கனவு கண்டார். அதை நனவாக்கும் வகையில், அரியலுார் கங்கைகொண்ட சோழபுரத்தில் பெரிய கோவிலை(Ariyalur Gangaikonda Cholapuram Big Temple) கட்டி, லிங்கத்தையும் நந்தியையும் பெரிதாக பிரதிஷ்டை செய்தார். தஞ்சாவூரைப்போல் சிவனுக்கு பிரகதீஸ்வரர் என்றும், அம்மனுக்கு பெரியநாயகி என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
கடற்படையை கட்டமைத்த ராஜேந்திர சோழன் :
முதன்முதலில், கடற்படை அமைத்த பெருமை ராஜேந்திர சோழனையே செரும். பிரமாண்ட கலங்களை வடிவமைத்து, போர்களை கண்டவன் ராஜேந்திர சோழன். இலங்கையின் மீது போர் நடத்தி வென்று, இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னன் என்ற பெருமையும் இவருக்கு கிடைத்தது.
கங்கை கொண்ட சோழபுரம் :
மதுரை,கேரளா உள்ளிட்ட தென்பகுதி முழுவதும், தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ராஜேந்திர சோழன், வட திசையில் படைகளோடு சென்று கங்கையை கடந்து, போர்களை புரிந்து வெற்றியுடன் திரும்பினார். இதுவே கங்கை கொண்ட சோழபுரம் உருவாக முக்கிய காரணம். இந்தோனேஷியா, சுமத்ரா தீவில், கடற்கொள்ளையர்களை ஒடுக்கி, கடல்வழி வணிகத்தை மேம்படுத்தினார் ராஜேந்திர சோழன். வலிமையான, வளமான ஆட்சியால் சோழர்களின் புகழ் உலகெங்கும் பரவியது.
நிழல் விழாத கோபுரம் :
தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கம் இங்குதான் உள்ளது. இங்குள்ள நந்தி சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டு தரையில் அமர்ந்துள்ளது. தினமும் பகலில் இந்த நந்தியின் மீது சூரிய ஒளிபட்டு, அந்த ஒளி கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது பிரதிபலிப்பது மிகவும் சிறப்பு. அக்காலத்திலேயே தமிழர்கள் கட்டிட கலை, வானியல் சாஸ்திரத்தில் நிபுணத்துவம் பெற்று இருந்தனர் என்பதை இது பறைசாற்றுகிறது. மூலஸ்தானத்தில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டு இருட்டில் லிங்கத்தைப் பார்த்தால் அற்புதமாக இந்த ஒளி தெரியும் வகையில் வடிவமைத்துள்ளனர் நம் சிற்ப வல்லுனர்கள். கோபுர கலசத்தின் நிழல் கீழே விழுவது கிடையாது.
கருவறையில் சந்திரகாந்த கல் :
கருவறையில் உள்ள லிங்கத்தின் அடியில் சந்திரகாந்த கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்று பார்த்தால், வெயில் காலத்தில் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும். குளிர் காலத்தில் குளிர்ச்சியை குறைத்து இதமான வெப்பத்தை தரும். பெரிய நாயகி அம்மன் பெயருக்கேற்றாற் போல, 9.5 அடி உயரத்தில் பிரமாண்டமாக அருள்பாலிக்கிறாள். இங்குள்ள நவக்கிரகம் மற்ற கோயில்களை போல் இல்லாமல், ஒரே கல்லில் தாமரைப்பூ வடிவில் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : கங்கைகொண்ட சோழபுரம் வருகிறார் மோடி : வரலாற்று தலத்தின் சிறப்புகள்
பிரதமர் மோடி வருகை :
உலகப் புகழ் பெற்ற கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரை தரிசனம் செய்ய பிரதமர் மோடி இன்று வருகிறார். முதலாம் ராஜேந்திர சோழனை கவுரவிக்கும் வகையில், நினைவு நாணயத்தை அவர் வெளியிடுகிறார். சோழபுரம் கோவிலில் நடக்கும், ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்று பெருவுடையாரை வழிபடுகிறார் பிரதமர் மோடி.
=====