11வது நாளாக தொடரும் போராட்டம் :
Sanitation Workers Protest in Chennai : சென்னையில் ராயபுரம் மற்றும் திருவிக. நகர் மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியதை எதிர்த்து உழைப்பவர் உரிமை இயக்கத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களுக்கு பணி பாதுகாப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் நடத்தி வரும் போராட்டம் 11வது நாளாக நீடிக்கிறது. இரவு, பகலாக போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
7ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி :
போராட்டத்தை முடிவு கொண்டு வர தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் சுமூக முடிவை எட்டவில்லை. அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா(Mayor Priya), மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் தலைமையில் நடத்தப்பட்ட 7வது கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. போராட்டக் குழுவினர் 15 நிமிடங்களில் கூட்டத்தில் இருந்து வெளியேறினர். இதனால் திட்டமிட்டப்படி வேலை நிறுத்தம் நீடிக்கிறது.
போராட்டக்காரர்கள் குற்றச்சாட்டு :
இந்தக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தூய்மை பணியாளர்களின் பிரதிநிதிகள், " 7ம் கட்டமாக அமைச்சர் முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையில், எங்களது கோரிக்கையை பற்றி ஒரு வார்த்தை கூட பேச அவர்கள தயாராக இல்லை. எங்களை அப்புறப்படுத்துவதை பற்றி மட்டுமே பேசுகிறார்கள். போராட்டக்காரர்களை பண ஆசை காட்டி திமுக கவுன்சிலர்கள் கலைக்கப் பார்க்கிறார்கள்” எனக் குற்றம்சாட்டினர்.
சமூக நீதி அரசா, கேள்வி ? :
”நாங்கள் பணி செய்யும் இடம் இங்குதான். எங்களுக்கு இங்கே பேச உரிமை இருக்கிறது. இங்கே இருந்து கலைந்து சென்று ராஜரத்தினம் மைதானத்தில் போராட்டம் நடத்திக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள். நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்கிறார்கள். இதுதான் சமூக நீதி அரசா? என்று கேள்வி எழுப்பி விட்டு வந்திருக்கிறோம்.
போராட்டம் தொடரும் :
மாநகராட்சி இணை ஆணையர் ஜெயசீலன் 20 ஆண்டுகள் உழைத்த தூய்மை பணியாளர்களை கொச்சைப்படுத்தும் வகையில், சில தொழிலாளர்கள் மட்டுமே போராடுகிறார்கள் என்று சொல்கிறார். இதை ஏற்றுக் கொள்ள முடியாது. எங்களது கோரிக்கையை ஏற்கும் வரை போராட்டம் தொடரும்.
துப்பாக்கியை காட்டினாலும் அஞ்ச மாட்டோம் :
காவல்துறை துப்பாக்கி வைத்து மிரட்டினாலும், நாங்கள் போராட்டத்தை கைவிடப்போவதில்லை. தொடர்ந்து போராடுவோம். அரசு தரப்பில் இருந்து பேசுவதற்கு தயாராக இல்லை; எங்களை வேறு இடத்திற்கு செல்லச் சொல்கிறார்கள். ஆனால் நாங்கள் ஒரு போதும் இந்த போராட்டத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம். போராட்டம் தொடரும். தேர்தலுக்கு முன்னர் ஒரு பேச்சு தேர்தலுக்கு பின்னர் ஒரு பேச்சு என திமுக அரசு ஈடுபடுகிறது” இவ்வாறு போராட்டக் குழு பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
===========